கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குளித்தலை அண்ணாநகரைச் சேர்ந்த ரமேஷ்பாபு என்பவரின் மனைவி அன்பழகி (51). இவர் அரசு பள்ளியில் ஆசிரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் 5ஆம் தேதி, இவரது வீட்டிலிருந்து நகைகள் திருடு போனதாக ரமேஷ்பாபு குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் சம்பவ இடத்தின் அருகே இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் ரமேஷ்பாபுவின் வீட்டின் மாடியில் வாடகைக்கு தங்கியிருந்த ரத்தினம் மனைவி சுகந்தி (39) என்பவர் நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் சுகந்தியை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உடனடியாக, போலீசார் அவரிடம் இருந்து திருடிய நகைகளை மீட்டு, அவரை கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட சுகந்தியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அதன்பின் சுகந்தியை திருச்சி பெண்கள் சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.