சென்னையில் நாளுக்கு நாள் கார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பெரும்பாலான கார்களின் உரிமையாளர்களுக்கு பார்க்கிங் வசதி இல்லாத காரணத்தினால், பலர் காரை சாலை ஓரங்களிலும், தெருக்களிலும் நிறுத்துகிறார்கள். இதனால் போக்குவரத்து பாதிப்பும், பொதுமக்களுக்கு இடையூறும் ஏற்படுகிறது.
இந்நிலையில், பார்க்கிங் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், தமிழாகி அரசுக்கு புதிய விதிமுறையை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அதாவது இனி சென்னையில் புதிதாக கார் வாங்குபவர்கள், காரை பதிவு செய்யும்போது அதற்கான பார்க்கிங் இடம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், அதற்கான சான்றை இணைப்பது கட்டாயமாக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது
அதன்படி, ஒருவர் எத்தனை காரை பதிவு செய்ய விரும்புகிறாரோ, அத்தனை காருக்குமான பார்க்கிங் வசதி இருப்பதற்கான ஆவணத்தை காட்ட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
குறித்த பரிந்துரையை, மாநில வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத் துறை ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய விதிமுறை விரைவில் நடைமுறைக்கு வரலாம் என கூறப்படுகிறது. இந்த புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்த பின், வாகனம் வாங்குவோர், அதை பதிவு செய்யும் போது பார்க்கிங் வசதி இருப்பதை உரிமையாளர் உறுதி செய்து அதற்கான ஆவணங்களையும் காண்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.