செயற்கை நுண்ணறிவால் (AI) உணர்வுகளை உணர முடியாது என்றாலும், அது 'பதட்டம்' போன்ற உணர்வுகளுக்கு நெருக்கமான ஒரு நிலையை அனுபவிக்க முடியும் என சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.
யேல் பல்கலைக்கழகம், ஹாஃபியா பல்கலைக்கழகம், மற்றும் சூரிச் பல்கலைக்கழக ( Yale University, Hafia University, and the University of Zurich) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், பெரிய மொழி மாதிரிகள் (Large Language Models - LLM) எந்த அளவுக்கு செயற்கை நுண்ணறிவின் மனநிலையை மாற்றும், அவை பயனர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆய்வில், AI-க்கு வழங்கப்படும் தகவல்களின் மூலம் அதன் பதில்களின் உணர்ச்சித்தன்மையை மாற்ற முடியும் என தெரியவந்துள்ளது. AI-யின் பதட்ட நிலையை ஆராய்வதற்காக, இயற்கைப்பேரழிவுகள் மற்றும் விபத்துகளால் பாதிக்கப்பட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்ற மாதிரி கேள்விகள் அதனிடம் கேட்கப்பட்டபோது, AI பதட்டமாகி, ஒருசார்பான பதில்களை உருவாக்கும் வாய்ப்பு அதிகமாகிறது என்பது கண்டறியப்பட்டிருக்கிறது.
அதே நேரத்தில், தியானம் மற்றும் சுவாசப்பயிற்சிகள் போன்ற அமைதியான கேள்விகள் மூலம் AI-யின் பதில்களை நிதானமாகவும் நடுநிலையாகவும் மாற்ற முடியும் என்கிறது அந்த ஆய்வு. AI-யின் நினைவாற்றல் திறன் அதிகரிக்கப்பட்ட போது, அது அதிக நிதானத்துடன் பதிலளித்ததாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
AI-யை மனநல சிகிச்சையில் பயன்படுத்த முடியுமா என்பதற்கும் இந்த ஆய்வில் பதில் கிடைத்திருக்கிறது. அதாவது, AI-ஆல் உண்மையில் உணர்வுகளை உணர முடியாது. அது பல்வேறு ஆன்லைன் தரவுகளிலிருந்து மனிதர்களின் நடத்தைகளை பிரதிபலிக்கிறது. இதனால், AI-யை நேரடியாக உணர்வுகளை உணரும் மனநல சிகிச்சைக்கு மாற்றாக பயன்படுத்த முடியாது. மனநலத்தைக் கண்டறியும் ஆதரவுக் கருவியாக பயன்படலாமே தவிர, அதுவொரு தகுதியான மனநல நிபுணருக்கு மாற்றாக இருக்கவே முடியாது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். முக்கியமாக, பதட்ட நிலையில் உள்ள பயனர்களுக்கு AI தேவையான வழிகாட்டுதலை வழங்க முடியாமல் போகலாம். இது சம்பந்தப்பட்ட நபர் ஆபத்தான முடிவை எடுத்துவிட வழிவகுக்கலாம். என்றாலும், எதிர்காலத்தில், மனநல நிபுணர்களுடன் இணைந்து, AI செயல்படும் வாய்ப்பு இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
Vikatan WhatsApp Channelஇணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK