உஷார் மக்களே... இனி கார் வாங்குவதாக இருந்தால், கார் பார்க்கிங் செய்யும் இட வசதியும் இருப்பதை நிரூபித்தால் தான் கார் சொந்தமாக வாங்க முடியும் என்கிற சட்டம் விரைவில் சென்னையிலும் நடைமுறைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து கடந்த மார்ச் 13ம் தேதி சென்னை பெருநகரப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட புதிய பார்க்கிங் திட்டத்தில் இனி சென்னையில் கார் வாங்குபவர்கள் ஆவணங்களுடன் தங்களிடம் காரை பார்க் செய்யும் இடவசதியும் இருக்கிறது என்பதற்கான ஆவணத்தையும் சமர்ப்பிக்கவேண்டும் என்று அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
புற்றீசல் போல சென்னையில் வாகனங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. சொந்தமாக கார் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான வீடுகளில் தனித்தனியே ஒருவருக்கு ஒரு கார் வீதம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், பெரும்பாலான இடங்களில் பார்க்கிங் வசதி கிடையாததால், சாலையோரத்தில் இரவு நேரங்களில் வாகனங்களை நிறுத்துகின்றனர்.
பலரும் ஈஸி இ.எம்.ஐ., லோன் கிடைக்கிறது என்று ஆசைப்பட்டு கார் வாங்கிவிட்டு அதன் பின்னர் காரைப் பார்க்கிங் செய்ய இடமில்லாமல் தவித்து வருவதையும் பார்க்க முடிகிறது. இன்னும் பலரும் புதிதாக காரை வாங்கி விட்டு அதன் பின்னர் ஓட்டப் பழகுகின்றனர். இதனால் வாகன நெரிசலும் ஏற்படுகிறது.
கடந்த 2022ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சென்னையில் சுமார் 92 லட்சம் கார்கள் இருந்ததாக ஆய்வு சொல்கிறது. அதே சமயம் சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் மட்டுமே சுமார் 30 லட்சம் கார்களுக்கு பார்க்கிங் வசதியே இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த சிக்கல்களைத் தவிர்க்க தான் இப்படி ஓர் அதிரடி பரிந்துரையைச் செய்துள்ளது சென்னைப் பெருநகரப் போக்குவரத்து ஆணையம். இனி கார் வாங்குபவர்கள் தங்களிடம் பார்க்கிங் வசதி உள்ளது என்பதை உறுதி செய்யவேண்டும் என்று சென்னைப் பெருநகரப் போக்குவரத்து ஆணையம் புதிய திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இதை தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறையும் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.