ஊழல் கறை படியாத இடமே இல்லை என்ற நிலையை தி.மு.க. ஏற்படுத்தி உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பாஜக சார்பில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “நவோதயா பள்ளியை "காமராஜர் பள்ளி" என மத்திய அரசு கொண்டு வர தயார். ஏழை குழந்தைக்கு ஒரே ஆயுதம் கல்வி மட்டும் தான். அதனால் தான் தமிழக பாஜக தொடங்கி வைத்துள்ள கையெழுத்து இயக்கம் 12 லட்சத்தை தாண்டி செல்கிறது. தீய சக்திகளின் கூடாரமாக திமுக மாறி உள்ளது. தமிழகம் முழுவதும் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் வெளியே சென்று விட்டு பத்திரமாக திரும்பி வந்து விடுவார்கள் என்ற நிலை உள்ளது. தமிழகத்தில் லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளது. தவறாக சொத்து சேர்ப்போருக்கு இப்போது மரியாதை அளிக்கும் நிலை உள்ளது. ஊழல் கறை படியாத இடமே இல்லை என்ற நிலையை தி.மு.க. ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் வீடு திரும்பும் வரை பதைபதைப்புடன் இருக்கின்றனர். நாட்டை காப்பாற்ற வேண்டும், தமிழகத்தை காப்பாற்ற வேண்டும். வீட்டை காப்பாற்ற வேண்டும்.எங்கு சென்றாலும் தமிழகத்தின் பொருட்களை பிரதமர் பரிசாக கொண்டு சென்று கொடுக்கிறார். தமிழ் மொழிக்கும், கலாச்சாரத்திற்கும் பெருமை சேர்ப்பதை பிரதமர் மோடி தொடர்ந்து செய்து வருகிறார்.
தமிழகத்தின் கடன் ரூ.9.5 லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. மது விற்பனை இல்லாத குஜராத் நிதி பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. ஆனால் மது விற்பனையில் ஈடுபடும் தமிழக அரசு பற்றாக்குறை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. தமிழகத்தின் கல்வித்தரத்தை குறைக்கும் செயலில் திமுக அரசு ஈடுபடுகிறது. கல்வி கற்றவர்கள் நாட்டை ஆள வேண்டும் என்பது பாரதிய ஜனதாவின் கொள்கை. ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் மது விற்பனை மூலம் வருகிறது. 2026 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வரும் வகையில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.