இந்தோனீசிய டிக்டோக் பிரபலம் ஒருவர், தனது தொலைபேசியில் இருந்த இயேசுவின் படம் ஒன்றிடம் பேசி, இயேசுவிடம் முடிவெட்டிக் கொள்ளும்படி அந்தப் பிரபலம் கூறியதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டில் இந்தோனீசிய அவருக்குக் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டிக்டோக்கில் 4,42,000க்கும் மேற்பட்ட ஃபாலோயர்களை கொண்டுள்ள ரட்டு தலிஸா என்ற திருநங்கை நேரலையில், "ஓர் ஆண் போலத் தெரிவதற்கு முடியை வெட்டிக்கொள்ள வேண்டும்" என்ற விமர்சனத்திற்குப் பதிலளித்துக் கொண்டிருந்தார்.
வெறுப்புணர்வைத் தூண்டியதாக சர்ச்சைக்குரிய 'ஆன்லைன் வெறுப்புப் பேச்சு சட்டத்தின்' கீழ் அவரைக் குற்றவாளி என அறிவித்த சுமத்ராவின் மெடன் பகுதியிலுள்ள நீதிமன்றம், திங்கள் கிழமையன்று அவருக்கு இரண்டு ஆண்டுகள், பத்து மாதம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
அவரது பேச்சு சமுதாயத்தில் "பொது ஒழுங்கு" மற்றும் "மத நல்லிணக்கத்தை" சீர்குலைக்கக் கூடும் எனக் கூறிய நீதிமன்றம் அவர் இறை நிந்தனை செய்திருப்பதாகக் குற்றம் சுமத்தியது.
தலிஸா இறை நிந்தனை செய்துவிட்டதாகப் பல்வேறு கிறிஸ்தவ குழுக்கள் காவல்துறையில் அவருக்கு எதிராகப் புகாரளித்த பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவு வந்துள்ளது.
தண்டனையைக் கடுமையாக விமர்சித்துள்ள ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட மனித உரிமைக் குழுக்கள், அது ரட்டு தலிஸாவின் "கருத்து சுதந்திரம் மீதான அதிர்ச்சியளிக்கும் தாக்குதல் என விவரித்ததுடன் தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
"சமூக ஊடகங்களில் மக்கள் சொல்லும் கருத்துகளுக்கு மின்னணு தகவல் மற்றும் பரிவர்த்தனை சட்டத்தை இந்தோனீசிய அதிகாரிகள் பயன்படுத்தக்கூடாது," என ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் இந்தோனீசியாவின் செயல் இயக்குநர் உஸ்மான் ஹமீது அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
"பாகுபாட்டைத் தூண்டுவது, எதிர்ப்பு அல்லது வன்முறை ஆகியவற்றைக் கொண்ட மதவெறுப்பை ஆதரிப்பதை இந்தோனீசியா தடை செய்ய வேண்டும் என்றாலும், ரட்டு தலிஸாவின் பேச்சு அந்த நிலையை எட்டவில்லை" என்று அவர் குறிப்பிட்டார்.
தலிஸா குற்றவாளி என அறிவித்ததை ரத்து செய்து அவர் காவலில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று இந்தோனீசிய அதிகாரிகளை ஹமீது வலியுறுத்தியுள்ளார்.
ஒழுக்கக்கேடு, அவதூறு, வெறுப்பு பேச்சு ஆகியவற்றை கிரிமினல் குற்றமாக அறிவிக்கும் பகுதிகள் உளிட்ட இஐடி சட்டத்தில் இருக்கும் பிரச்னைக்குரிய பகுதிகளை நீக்கவேண்டும் அல்லது கணிசமான மாற்றத்தைச் செய்யவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆன்லைன் அவதூறு தொடர்பாக முதலில் 2008ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, 2016ஆம் ஆண்டு திருத்தப்பட்ட இஐடி சட்டம் ஆன்லைன் தளத்தில் தனிமனிதர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்டது.
ஆனால் உரிமைக் குழுக்கள், ஊடக குழுக்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் இந்தச் சட்டம் கருத்து சுதந்திரத்திற்கு எதிராகப் பயன்படுத்தப்படக் கூடும் என நீண்ட காலமாகக் கவலை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டுக்கும் 2024க்கும் இடைபட்ட காலத்தில் தங்களுடைய கருத்து சுதந்திரத்தைப் பயன்படுத்தும்போதும் இஐடி சட்டத்தை மீறிவிட்டதாக 560 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அளிக்கும் தரவுகளின்படி 421 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
அவதூறு மற்றும் வெறுப்புப் பேச்சு குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டவர்களில் பலர் சமூக ஊடகங்களில் செல்வாக்கு உள்ளவர்களும் அடங்குவர்.
கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், இஸ்லாம் மதத்தை நிந்தனை செய்ததாக இஸ்லாமிய பெண் ஒருவருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பன்றி இறைச்சி உண்பதற்கு முன் ஒரு இஸ்லாமிய வாசகம் பேசிய டிக்டோக் வீடியோ வைரலானது.
ஆம்னெஸ்டி இன்டர்நேஷனலின் கூற்றுப்படி, 2024இல் எந்த மாதிரியான விலங்குகள் குர்ஆனை படிக்கும் ஆற்றல் கொண்டவை என குழந்தைகளைக் கேட்கும் வீடியோவை பதிவு செய்த டிக்டோக்கர் இறை நிந்தனைக்காகக் கைது செய்யப்பட்டார்.
பெளத்தர்கள், கிறிஸ்தவர்கள், இந்துகள் உள்ளிட்ட பல மத சிறுபான்மையினருக்கு இந்தோனீசியா தாயகமாக இருக்கிறது. ஆனால் இந்தோனீசியாவில் பெரும்பான்மையினர் இஸ்லாமியர்களாக உள்ளனர். இஐடி சட்டத்தை மீறியதாகக் கூறப்படுவோரில் பெரும்பான்மை மக்கள் இஸ்லாம் மதத்தை அவமதித்த சிறுபான்மையினராக உள்ளனர்.
தலிஸாவின் வழக்கைப் போல் இஸ்லாமிய பெண் ஒருவர் கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக வெறுப்புப் பேச்சை பேசியதாகக் குற்றம் சாட்டப்படுவது அவ்வளவு வழக்கமானது அல்ல.
முன்னதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் அவருக்கு நான்கு ஆண்டுகளுக்கு அதிகமான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியதுடன், திங்கட்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக உடனடியாக மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீடு செய்ய தலிஸாவுக்கு ஏழு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் , , (டிவிட்டர்) மற்றும் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)