சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் கூட்டணியின் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடந்துவருகிறது. 'கூலி' படப்பிடிப்பில் தனது போர்ஷனை முடித்துக்கொடுத்துவிட்ட வேகத்தில், அடுத்த படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார் ரஜினிகாந்த்.
ரஜினியின் திரைப்பயணத்தில் வசூலில் மிகப்பெரிய பிரேக் கொடுத்த படம் 'ஜெயிலர்'. ஓய்வுபெற்ற ஜெயிலர் முத்துவேல் பாண்டியனாக நடித்திருந்த ரஜினி, அனிருத்தின் மிரட்டலான இசை, நெல்சனின் கமர்சியல் மீட்டர் என உருவான இப்படம் 650 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனது.
இந்த ஒரே படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் என மல்டி ஸ்டார்களின் கூட்டணியும், ஒரு பாடலுக்கு தமன்னாவின் ஆட்டமும் படத்தின் வெற்றிக்கு பெருமளவில் உதவியதால், இதையே இப்போது ஃபார்முலாவாக்கியுள்ளனர். லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ரஜினி நடித்து முடித்திருக்கும் 'கூலி"யில் கூட இதே ஃபார்முலாதான் கடைபிடிக்கப்பட்டுள்ளது. 'ஜெயிலர்' ஃபார்முலா என்றே பேசப்பட்ட பின், 'ஜெயிலர் 2' இந்த ஃபார்முலா இன்னும் பட்டை தீட்டப்பட்டுள்ளது.
'ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைப்போல இரண்டாம் பாகத்தின் நடிகர்களின் பட்டியலும் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகவிருக்கின்றன. கூடுதலாக இதில் பாலகிருஷ்ணாவும் இணையலாம் என்கின்றனர். முதல் பாகத்திலேயே அவர் நடித்திருக்க வேண்டியது. ரொம்பவும் சின்ன கதாபாத்திரமாக இருக்கும் என்பதால், அடுத்த படத்தில் பெரிய ரோலில் கொண்டு வரலாம் என நெல்சன் விரும்பியதால், இரண்டாம் பாகத்திற்குள் வருகிறார் பாலய்யா.
'ஜெயிலர் 2'வின் படப்பிடிப்பு சென்னை ராயப்பேட்டையில் உள்ள திரையரங்கம் ஒன்றிற்கு அருகே தான் தொடங்கியுள்ளது. இந்த ஷெட்யூலில் ரஜினியின் போர்ஷன்களை படமாக்கி வருகின்றனர். தொடர்ந்து 15 நாட்கள் இதே இடத்திலும் அதன் பின், ஈசிஆரில் உள்ள ஸ்டூடியோ ஒன்றிற்கு மாறலாம் என்றும் சொல்கின்றனர்.
முதல் பாகத்தில் வில்லன் வர்மா (விநாயகன்) செம கெத்து காட்டியிருப்பார். அதில் அவரை பழி தீர்ப்பார் ஜெயிலர் முத்துவேல் பாண்டியன். அதில் வர்மா இறப்பதற்கு முன்னால், ''நீ என்னை கொல்லலாம். ஆனால், எனக்கு பின்னால் வருபவர்களை ஒன்றும் செய்யமுடியாது' என்று ஒரு டயலாக்கை வீசியிருப்பார். அந்த ஒரு வார்த்தையில் இருந்து தான் இரண்டாம் பாகத்திற்கான கதை உருவாகியிருக்கலாம் என்ற பேச்சும் இருக்கிறது. நெல்சன் படம் என்றால் அனிருத் இல்லாமலா! மான்டேஜ் பாடல்களுக்கான தீம் மியூசிக் மற்றும் ஒரு பாடலை கொடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...