தமிழகத்தில் 2026ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆட்சியை தக்கவைக்க திமுக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தொடங்கியுள்ளது. அந்த வகையில் பல அதிரடி மாற்றங்களையும் செய்து வருகிறது.
அந்த வகையில் தற்போது திமுக கட்சியின் மாணவர் அணி தலைவராக இருந்த ராஜீவ் காந்தியை அந்த பொறுப்பிலிருந்து பொதுச் செயலாளர் துரைமுருகன் விடுவித்துள்ளார். அவரை திமுக மாணவர் அணி செயலாளராக துரைமுருகன் நியமித்துள்ளார். இதேபோன்று திமுக கட்சியின் மாணவர் அணி செயலாளராக இருந்த சிவிஎம்பி எழிலரசனையும் அப்பொறுப்பிலிருந்து விடுவித்து அவரை தற்போது கொள்கை பரப்பு செயலாளராக நியமித்து துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே திமுகவில் மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட்டு வரும் நிலையில் தற்போது முக்கிய பொறுப்பாளர்களையும் மாற்றி வருகின்றனர். திமுகவில் இன்னும் பல அதிரடி மாற்றங்கள் நிகழலாம் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.