முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாசித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, காலை 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.
காலை 7 மணிக்கு விநாயகர் தனித்தேரிலும், குமரவிடங்கபெருமான் சுவாமி, வள்ளி தெய்வானை அம்பாள்களுடன் பெரிய தேரிலும், தெய்வானை அம்பாள் தனித்தேரிலும் எழுந்தருளினர். பக்தர்கள் அரோகரா என்ற கோஷங்கள் முழங்க தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர். வெளி வீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்துள்ளனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து 11-ம் திருநாளான நாளை மாலையில் மேலக்கோவிலில் இருந்து குமரவிடங்கபெருமான் சுவாமியும், தெய்வானை அம்பாளும் சன்னதி தெருவில் உள்ள யாதவர் மண்டபத்திற்கு எழுந்தருளுகின்றனர். அங்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி, அம்பாள் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி வெளிவீதி வழியாக நெல்லை நகரத்தார் தெப்பக்குளம் மண்டபம் சேர்கிறார்கள். அங்கு இரவு அபிஷேகம், அலங்காரமாகி சுவாமி அம்பாளுடன் தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை சுற்றும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
12-ம் திருநாளான நாளை மறுநாள் மாலையில் சுவாமி, அம்பாள் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளிலும் உலா வருகிறார்கள். அன்றைய தினம் இரவு சுவாமியும், அம்பாளும் தனித்தனி மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை சேர்கிறார்கள்.