ஹரியானா மாநிலத்தில் நடந்த மாநகராட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அங்குள்ள 10 மாநகராட்சிகளில், காங்கிரஸ் கட்சியின் பூபேந்திர ஹூடாவின் கோட்டையான ரோஹ்தக் உட்பட 9 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. மீதமுள்ள ஓர் இடத்தில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
பாஜக மேயர் வேட்பாளர்கள் அம்பாலா, குருகிராம், சோனிபட், ரோக்தக்த கர்னால், ஃபரிதாபாத், பானிபாட், ஹிசார் மற்றும் யமுனாநகர் ஆகிய இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். மனேசரில் சுயேட்சை வேட்பாளர் இந்தர்ஜீத் யாதவ், பாஜகவின் சுந்தர் லாலை தோற்கடித்துள்ளார். மாநிலத்தில் 2024 பேரவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியிருந்த காங்கிரஸ் கட்சி நகராட்சித் தேர்தலிலும் வெற்றிக் கணக்கைத் துவங்கத் தவறிவிட்டது.
குருகிராம், மனேசர், ஃபரிதாபாத், ஹிசர், ரோகிதக், கர்னால் மற்றும் யமுனாநகர் ஆகிய 7 மாநகராட்சிகளுக்கான மேயர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 2-ம் தேதி நடந்தது. அதேபோல், அம்பாலா மற்றும் சோனிபட் மேயர்பதவிக்கான இடைத்தேர்தல் மற்றும் 21 மாநகராட்சி குழுக்களுக்கான தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலும் மார்ச் 2-ம் தேதி நடந்தது. பானிபட் மாநகராட்சிக்கான மேயர் பதவி மற்றும் 26 கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 9-ம் தேதி நடந்தது. முடிவுகள் இன்று அறிக்கப்பட்டன.
கடந்த முறை சோனிபட்டின் மேயராக இருந்த காங்கிரஸைச் சேர்ந்த நிகில் மதான், கடந்த 2024 பேரவைத் தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் இணைந்து பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார். அம்பாலா மேயராக இருந்த ஷக்தி ராணி சர்மாவும் பேரவைத் தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் இணைந்து கல்கா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இவை தவிர மற்ற மாநகராட்சிகளில் பாஜக மேயர்களே இருந்தனர். இந்தமுறை பாஜக 9 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
இந்த மேயர் தேர்தலில் அதிக வாக்குகளில் வெற்றி பெற்றவராக ஃபரிதாபாத்தின் பாஜக வேட்பாளர் பிரவீன் ஜோஷி 3 லட்சம் வாக்குகள் விதியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் குருகிராம் மேயர் வேட்பாளரான ராஜ் ராணி 1.79 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மாநகராட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடைபெறுவதற்காக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாநில தேர்தல் ஆணையம் மிகப்பெரிய அளவிலான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.
காங்கிரஸுக்கு பெரும் அடி: உள்ளாட்சித் தேர்லுக்கு முன்பாக காங்கிரஸ் தலைவர்களும் நிர்வாகிகளும் பாஜகவுக்கு மாறியதால் இந்த உள்ளாட்சித் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அடியைக் கொடுத்துள்ளது. அடிமட்ட அளவில் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் வலுவான கட்சி அமைப்பை மாநில பாஜக கொண்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ உட்கட்சி பூசல் மற்றும் கோஷ்டி மோதல்களை சந்தித்தது.
இதனிடையே, மாநிலத்தின் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக நிச்சம் வெற்றி பெறும் என்று மாநில முதல்வர் நயாப் சிங் சைனி நம்பிக்கைத் தெரிவித்திருந்தார். மாநிலத்தில் ட்ரிபிள் இன்ஜின் ஆட்சி அமைந்ததும் பணிகள் மூன்று மடங்கு வேகத்தில் நடக்கும் என்று தெரிவித்திருந்தார். மத்திய அரசு, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பாஜக அதிகாரித்தில் இருப்பதையே ட்ரிபிள் இன்ஜின் அரசு என்று குறிப்பிட்டிருந்தார்.