Bain & Company புதிய ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. தற்போது அதற்கு மாறாக ஒரு புதிய தகவலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையின் படி, 2027க்குள் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் 2.3 மில்லியனுக்கும் அதிகமான புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். உலகளவில் AI துறையில் பணியாற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் எண்ணிக்கை 2024ல் 8 லட்சமாக இருந்த நிலையில், 2025ல் 9.4 லட்சமாகவும், 2026ல் 10.8 லட்சமாகவும் உயரும். இருந்தாலும், AI தொழில்நுட்பத்திற்கான தேவை இன்னும் அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் துறையில் 2025க்குள் குறைந்தது 1.5 மில்லியன் முதல் 2 மில்லியன் வரை பணியாளர்கள் தேவைப்படும் நிலையில், பெரிய அளவிலான பணியாளர் பற்றாக்குறை உருவாக வாய்ப்பு உள்ளது. இது தொழில்நுட்பத் துறையில் இருக்கும் நபர்கள் AI துறைக்கு மாறி வேலை வாய்ப்புகளைப் பெற சிறந்த சந்தர்ப்பமாக பார்க்கப்படுகிறது.
AI தொழில்நுட்ப நிபுணர்கள் பற்றாக்குறை மேற்கு நாடுகளில் மிகக் கடுமையாக இருக்கும் என கூறப்படுகிறது. யுகே (UK) 50% பணியாளர்கள் குறைவாகவும், ஜெர்மனியில் 70% AI வேலைகள் நிரப்பப்படாமல் போகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் 2027க்குள் 60,000 பணியாளர் பற்றாக்குறை ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், உலகளவில் AI நிபுணர்கள் மீது அதிக தேவை உருவாகும். குறிப்பாக, இந்திய தொழில்நுட்ப நிபுணர்கள், அமெரிக்கா, யுகே போன்ற நாடுகளில் உள்ள வேலை வாய்ப்புகளைப் பெறும் வாய்ப்பு அதிகரிக்கும்.
Bain & Company நடத்திய ஆய்வில் 44% நிறுவன நிர்வாகிகள், AI நிபுணர்கள் இல்லாததால் நிறுவனங்களில் AI சார்ந்த தீர்வுகளை செயல்படுத்த முடியவில்லை எனக் கூறியுள்ளனர். இந்த அறிக்கையில், இந்தியா உலகளவில் AI தொழில்நுட்ப நிபுணர்களின் மையமாக மாற நல்ல வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் திறமை வாய்ந்த பணியாளர்கள் குறைவாக இருப்பதால், மறு பயிற்சி மற்றும் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வது முக்கியமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. “இந்திய தொழில்நுட்பத்துறைக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு, ஆனால் AI வேலை வாய்ப்புகள் கிடைப்பதை விட 1.5 முதல் 2 மடங்கு அதிகமான பணியாளர் தேவை இருக்கும். எனவே, நவீன தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதன் மூலம் இந்தியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என Bain & Company நிறுவனத்தின் இந்திய தலைவர் சைக்காத் பானர்ஜி தெரிவித்துள்ளார்.