பீகார் சட்டசபையில் நடந்த விவாதத்தின் போது, முதல்வர் நிதிஷ்குமார், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் அரசியல் தீர்மானங்களை விமர்சனம் செய்யும் வகையில், அவர் ஊழல் புகாரில் சிக்கியபோது தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வர் பதவியில் அமர்த்தினார் என்று தெரிவித்தார். இந்த கருத்து எதிர்க்கட்சியான ஆர்ஜேடி (RJD) உறுப்பினர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதனை பெண்களை அவமதிக்கும் வகையில் உள்ளதாக கூறி, முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி உட்பட ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் சட்டமன்றக் கூட்டத்தொடரிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராப்ரி தேவி, “நிதிஷ்குமார் சட்டமன்றத்திற்கு ‘பாங்கு’ (Bhaang) சாப்பிட்டுவிட்டே வருகிறார். நிதிஷ்குமார் கடந்த 2005 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை அதாவது அவர் முதலமைச்சர் ஆவதற்கு முன்பு வரை பெண்கள் ஆடை கூட அணியவில்லை என்று தான் நம்புகிறார். அவர் 2005 ஆம் ஆண்டு பிறந்தது போன்றும் 2014 ஆம் ஆண்டில் தான் பிரதமர் மோடி இந்த உலகத்திற்கு வந்தது போன்றும் நடிக்கிறார். மேலும் பெண்கள் கடந்த காலங்களில் ஆடை அணியவில்லை என்றால் அதற்கான அர்த்தத்தை அந்த இரண்டு தலைவர்களும் கண்டிப்பாக சொல்லவேண்டும் என்று கூறியுள்ளார்.