விரைவில் தான் தற்போது நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு இயக்குநராக களமிறங்க முடிவு செய்திருக்கிறார் ரவி மோகன்.
நடிகர் ஜெயம் ரவி, ரவி மோகன் என்று பெயரை மாற்றிய பிறகு தற்போது 'பராசக்தி' மற்றும் 'கராத்தே பாபு' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்நிலையில் விரைவில் இந்த இரு படங்களின் பணிகளையும் முடித்து விட்டு, இயக்குநராக அறிமுகமாக முடிவு செய்திருக்கிறார்.
இதற்காக படப்பிடிப்புக்கு இடையே தனது கதைக்கு திரைக்கதை அமைக்கும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை அவரே தயாரித்து, இயக்கவும் முடிவு செய்துள்ளார். முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியுள்ள இக்கதையின் நாயகனாக யோகி பாபு நடிக்கவுள்ளார்.
பல பேட்டிகளில் இயக்குநராகும் ஆசை குறித்து, அதில் யோகி பாபு நடிப்பார் எனவும் கூறியிருந்த நிலையில், நடிகர் ரவி மோகனின் ஆசை இந்த வருடத்திலேயே சாத்தியப்படுகிறது. நடிகர் ரவி மோகன், நடிகர் கமலின் ஆளவந்தான் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.