Dharmendra Pradhan: 'நவீன் பட்நாயக்கின் தலைவலி; மோடியின் தூதுவர் - யார் இந்த தர்மேந்திர பிரதான்?
Vikatan March 12, 2025 10:48 PM

'ஒடிசா அரசியல்!'

புத்தாயிரத்தின் தொடக்கத்தில் 2000 ஆம் ஆண்டில் நடந்த ஒடிசா சட்டமன்றத் தேர்தல் அது. பிஜூ பட்நாயக்கின் மறைவுக்குப் பிறகு நவீன் பட்நாயக் கட்சிக்குத் தலைமையேற்று அந்தத் தேர்தலுக்கான வேலைகளை செய்துகொண்டிருந்தார். பிஜூ ஜனதா தளம், பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தது. பிஜூ பட்நாயக்கின் மகன் என்கிற செண்டிமென்ட்டும் அந்தக் கூட்டணி பலமும் நவீன் பட்நாயக்கை அரியணையை நோக்கி நகர்த்தியது. தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. பிஜூ ஜனதா தளக் கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றியை நோக்கி நகர்கிறது. வெற்றி மகிழ்ச்சியில் நவீன் பட்நாயக் தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளிக்கக் கிளம்பினார். ரூபன் பானர்ஜி என்கிற பத்திரிகையாளரும் நவீன் பட்நாயக்குடன் காரில் பயணிக்கிறார். ஒவ்வொரு தொகுதி நிலவரமாக தெரிய வரவர அதை அந்தப் பத்திரிகையாளர் நவீனுக்கு அப்டேட் செய்கிறார். பல்லஹரா என்கிற தொகுதியின் முடிவும் வெளியாகிறது.

தர்மேந்திர பிரதான்

'நவீன் பட்நாயக்கின் கணிப்பு!'

பிஜூ ஜனதா தளத்தின் கூட்டணிக் கட்சியான பாஜக அந்தத் தொகுதியில் வெல்கிறது. இந்தத் தகவலும் நவீனுக்கு அப்டேட் செய்யப்படுகிறது. அதுவரை சலனமே இல்லாமல் அமைதியாக இருந்த நவீன் பட்நாயக்கின் முகத்தில் இப்போது கொஞ்சம் இறுக்கம். 'ஓ... எனக்கு ஒரு பிரச்சனை வந்துவிட்டது.' என்கிறார். நவீன் பிரச்னையாகப் பார்த்தது பல்லஹரா தொகுதியில் பாஜக வென்றதற்காக அல்ல. அந்தத் தொகுதியில் பாஜக சார்பில் டிக்கெட் வாங்கி வென்றது தர்மேந்திர பிரதான். தற்போது நாடாளுமன்றத்தில் மாநில உரிமைகளுக்கு எதிராகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் சர்ச்சை குண்டுகளை வீசி வருகிறாரே அதே தர்மேந்திர பிரதான்தான்.

இத்தனைக்கும் அந்த 2000 ஆம் ஆண்டில்தான் தர்மேந்திர பிரதான் தேர்தல் அரசியலுக்கே வருகிறார். நவீன் பட்நாயக்கைவிட கிட்டத்தட்ட 20 வயது இளையவர்தான் தர்மேந்திர பிரதான். அப்படியிருந்து நவீன் பட்நாயக் தர்மேந்திர பிரதானை ஒரு அபாயமாகப் பார்த்தார். நவீன் பட்நாயக் அமைதியானவர். ஆனால், விஷயங்களை உட்கிரகித்து கவனித்து எடைபோடுவதில் மேதைமை கொண்டவர். ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவரைப் பற்றித் தனக்குள் ஒரு சித்திரத்தை வரைந்துகொள்வார். தர்மேந்திர பிரதானின் தந்தை தீபேந்திர பிரதானும் தீவிரமான பாஜக விசுவாசி. வாஜ்பாய் அரசில் மத்திய அமைச்சராக இருந்தவர். அந்த சமயத்தில் பாஜகவின் கூட்டணியில் இருந்து நவீனும் எம்.பி ஆக நாடாளுமன்றம் சென்றிருந்தார். அதனால் தர்மேந்திர பிரதானின் அரசியல் பின்னணி என்னவென்பது அவருக்குத் தெளிவாகவே தெரியும்.

தர்மேந்திர பிரதான்
அதனால்தான் தர்மேந்திர பிரதான் வெற்றி பெறுகிறார் என்றவுடனேயே, 'ஓ...எனக்கு ஒரு பிரச்னை வந்துவிட்டது.' என்றார். அவரின் கணிப்பு பொய்யாகவே இல்லை.

'ஆட்சியை இழந்த நவீன் பட்நாயக்!'

பாண்டியனுடன் நவீன் பட்நாயக்

24 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சியிலிருந்த நவீன் பட்நாயக் 2024 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்து ஆட்சியை இழக்கிறார். அந்தத் தோல்விக்கு சூத்திரதாரியாக இருந்தவர் தர்மேந்திர பிரதான். 2019, 2024 ஆகிய ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் நவீன் பட்நாயக்குக்கு எதிராக தர்மேந்திர பிரதான்தான் எதிர்முகமாக நிறுத்தப்பட்டிருந்தார். ஒடிசாக்காரர், அரசியல் பின்னணியுடன் அனுபவமும் உடையவர் என்பதால் தர்மேந்திர பிரதானுக்கு மக்கள் மத்தியில் ஆதரவும் இருந்தது. நவீன் பட்நாயக்கை துறைச் செயலாளர்களாலும் அமைச்சர்களாலுமே தொடர்புகொள்ள முடியவில்லை. வெளி மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்தான் ஒடிசாவை ஆளுகிறார் என அவர் முன்னெடுத்த பிரசாரங்கள் மக்கள் மத்தியில் எடுபட்டது. நவீன் பட்நாயக் ஆட்சியை இழந்தார்.

'அரசியல் பின்னணி!'

தர்மேந்திர பிரதான் அடிப்படையிலேயே ஆர்.எஸ்.எஸ் -காரர். இந்துத்துவ மாணவ அமைப்பான ABVP இல் உறுப்பினராக இருந்து ஒரு கட்டத்தில் தேசிய அளவிலான பொறுப்பைப் பெறும் அளவுக்கு உயர்ந்தார். புபனேஷ்வரின் உத்கல் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறையில் முதுகலைப்பட்டம் பெற்றிருந்தார்.

2000 ஆம் ஆண்டில் ஒடிசாவில் எம்.எல்.ஏ ஆனவர், 2004 ஆம் ஆண்டில் தியோகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார். 2009 ஆம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவியவருக்கு கட்சியில் உயர்பதவி வழங்கப்பட்டது. தேசிய பொதுச்செயலாளர் அளவுக்கு உயர்ந்தார். 2014 பாஜக வென்று ஆட்சியமைத்தவுடன் தர்மேந்திர பிரதான் மத்தியப் பிரதேசத்திலிருந்து ராஜ்ய சபா எம்.பி ஆக்கப்பட்டார். அத்தோடு பெட்ரோலியத் துறை அமைச்சகமும் அவர் கையில் கொடுக்கப்பட்டது.

தர்மேந்திர பிரதான்

அந்த முதல் ஆட்சி காலத்தில் இந்தியா முழுவதும் கழிவறைகளை கட்டுவது, சுவச் பாரத், உஜ்வாலா யோஜனா போன்ற திட்டங்களை மோடி தீவிரமாக முன்னெடுத்தார். விளிம்புநிலை மக்களுக்கு மானிய விலை சிலிண்டர் வழங்கிய திட்டத்தை துடிப்பாக செயல்படுத்தியதால் மோடியின் நம்பிக்கையைப் பெற்றார். கேபினட் அமைச்சர் ஆக்கப்பட்டார். 2021 இல் கல்வித்துறை அமைச்சராக ரமேஷ் பொக்ரியால் கொரோனாவால் பாதிக்கப்படவே அந்தத் துறை தர்மேந்திர பிரதானின் கையில் வந்தது. இவர் காலகட்டத்தில்தான் நீட் வினாத்தாள் கசிந்த விவகாரமும் அரங்கேறியிருந்தது. 2024 இல் ஒடிசாவின் சம்பல்பூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றவருக்கு மீண்டும் கல்வித்துறையை வழங்கினார் மோடி. மோடி முதல் முறையாக 2014 இல் ஆட்சியை பிடித்தபோது அத்தனை மூர்க்கமாக தங்களின் கோட்பாடுகளை செயல்படுத்தவில்லை. ஆனால், அடுத்தடுத்து ஆட்சியைப் பிடிக்கும்போது ஆர்.எஸ்.எஸ் இன் கொள்கைகள் எல்லாவற்றையும் படிப்படியாக செயல்படுத்த ஆரம்பித்தனர். கல்வித்துறையில் தாங்கள் விரும்பியபடி தங்களின் கொள்கைகளை அமல்படுத்த வேண்டுமென்பது அவர்களின் நீண்ட காலத் திட்டம். அந்தத் திட்டத்துக்கான தூதுவராகத்தான் பிரதானை மோடி பார்க்கிறார். அதனால்தான் நாடாளுமன்றத்தில் அத்தனை ஏக வசனத்தில் தர்மேந்திர பிரதான் பேசிக்கொண்டிருக்கிறார்.

தர்மேந்திர பிரதான்
மாநில சுயாட்சிக்கும் கூட்டாட்சிக்கும் எதிராகப் பேசுவது ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் ஆளும் மாநிலக் கட்சிக்கும் அதன் எம்.பிக்களும் எதிராகச் செய்யும் அரசியல் மட்டுமல்ல. அது ஒரு மாநில மக்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளுக்கு எதிராக செய்யும் அரசியல். இதை தர்மேந்திர பிரதான் உணர வேண்டும்.

Reference : Naveen Patnaik by Ruben Banerjee

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.