பாகிஸ்தான்: ரயிலைக் கடத்திய பலூச்சிகள் யார்? அவர்களின் திராவிட தொடர்பு என்ன?
Vikatan March 12, 2025 05:48 PM

பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை பலூச் விடுதலை படை (BLA) என்ற தீவிரவாத அமைப்பு நேற்று சிறைபிடித்தது. ரயில் ஓட்டுநர் காயமடைந்த நிலையில், அதில் பயணம் செய்த 30 பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றுள்ளது. 500-க்கும் மேற்பட்ட பயணிகள், பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் செயல்படும் பலூச் விடுதலை படை (Baloch Liberation Army (BLA)), ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் பெஷாவார் நகருக்கு செல்லும் போது, பலுசிஸ்தானில் உள்ள போலான் மாவட்டத்தில் மறைந்திருந்து தாக்கியுள்ளது.

பலூச் விடுதலை படை (BLA), அமெரிக்காவாலும் பாகிஸ்தானாலும் தீவிரவாத அமைப்பாக கருதப்படுகிறது. பல ஆண்டுகளாக இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

BLA Hijack

BLA-வால் ரயில் தாக்கப்பட்ட இடத்துக்கு எல்லை பாதுகாப்பு படையினர் உள்பட பாகிஸ்தான் இராணுவத்தின் இதர பிரிவி வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 80 பணயக்கைதிகளை மீட்டுள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. பணயக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டால் தீவிரமான எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் என BLA-வைச் சேர்ந்தவர்கள் எச்சரித்துள்ளனர்.

BLA Hijack

பணயக்கைதிகளின் விடுதலைக்கு ஈடாக சிறையில் உள்ள பலூச் அரசியல் கைதிகள், தேசிய எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மற்றும் காணாமல் போனதாக கூறப்படுபவர்களை விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, 'அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தும் மிருகங்கள்' உடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தாது என்று தெரிவித்துள்ளார். இராணுவம் பதில்தாக்குதல் நடத்தியதில் 17 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரயிலுக்குள் எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்ற விவரங்கள் வெளிவரவில்லை.

பலூச்சிகளும் திராவிட தொடர்பும்!

BLA பாகிஸ்தானில் அதிக ஆட்களைக் கொண்ட ஒரு பிரிவினைவாத இயக்கமாகும். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லைகளில் வலிமையாக உள்ளது. குவாதார் ஆழகடல் துறைமுகம் மற்றும் பிற திட்டங்களில் சீன பிற முதலீடுகள் செய்யப்படும் கனிம வளம் நிறைந்த பகுதியில் BLA செயல்படுகிறது.

பலூசிஸ்தான் பாகிஸ்தானில் உள்ள மேற்கு மாநிலமாகும். நிலப்பரப்பளவில் மிகப் பெரிய மாகாணம் ஆனால் மக்கள் தொகை குறைவுதான். இங்குள்ள மக்கள் பிராகுயி, பஷ்டு மற்றும் பலூச்சி மொழிகளைப் பேசுகின்றனர். சில இடங்களில் சிந்தி, சரைகி மொழிகளும் பேசுகின்றனர்.

பிராகுயி பாகிஸ்தான் சுற்றுவட்டாரத்தில் உள்ள எந்த மொழியுடனும் தொடர்பில்லாத தனி மொழியாக இருக்கிறது. இதனை ஆங்கிலேயர்கள்தான் இந்திய துணை கண்டத்தில் ஆட்சி நடத்தியபோது கண்டறிந்தனர்.

1816 ஆம் ஆண்டில் பிராகுயி மொழி மற்ற மொழிகளிலிருந்து வேறுபட்டது என்பதை எச்.போட்டிங்கர் முதலில் குறிப்பிட்டார். இ. ட்ரம்ப் என்பவர் பிராகுயி மொழியை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து அதை திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்பதை நிறுவினார்.

தற்போது பிராகுயி மொழி 'வட திராவிட துணைக் குழுவில்' சேர்க்ப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்தில் பேசப்படும் குருக் அல்லது ஓரான் மற்றும் பீகார், மேற்கு வங்கத்தில் பேசப்படும் ஓரான் போன்ற திராவிட மொழிகளில் ஒன்றாக் பார்க்கப்படுகிறது.

Brahui

இன்றைக்கும் பிராகுயி வார்த்தைகளுக்கும் பிற திராவிட மொழிகளில் பயன்படுத்தப்படும் சொற்களுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.

Today – ஐனோ (பிராகுயி), இன்னு (தமிழ், மலையாளம்)

You – நீ (பிராகுயி), நீ (தமிழ், மலையாளம்)

Come – பா (பிராகுயி), வா (தமிழ், மலையாளம்)

Snore – குர்காவ் (பிராகுயி), குறட்டை (தமிழ்)

Eye – சான்(பிராகுயி), கண் (தமிழ்)

Stone – சால் (பிராகுயி), கல் (தமிழ்)

Milk – பால் (பிராகுயி), பால் (தமிழ்)

News – ஹவல் (பிராகுயி), தகவல் (தமிழ்)

பிராகுயி மொழி நீண்ட நாள்களுக்கு பேச்சு மொழியாகவே இருந்துவந்துள்ளது. பலூச் மன்னர்கள் காலம் தொட்டு ஆட்சி மொழியாக இருந்தது. எளிய, படிப்பறிவில்லாத மக்களே பிராகுயி பேசிவருகின்றனர்.

சிந்து சமவெளி நாகரிகத்தின் வழித்தோன்றல்கள்தான் பிராகுயிகள் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். சிந்து சமவெளி நாகரிகம் என்ன காரணங்களுக்காக அழிந்து போனது என்பது இதுவரை தெரியாது. ஆனால் அப்படி மறையும் காலத்தில் ஒரு பிரிவு மக்கள் குழு பலூச்சிஸ்தானுக்கு சென்று தங்களது மொழியை பாதுகாத்துள்ளனர்.

பலூச்சிகள் கிளர்ச்சியில் ஈடுபடுவது ஏன்?

இந்தியாவைப் போலவே பாகிஸ்தானும் சுதந்திரதின்போது பல துண்டுகளாக இருந்தது. 1948ம் ஆண்டு பாகிஸ்தான் அரசு பலூசிஸ்தானை அப்போது ஆண்டுவந்த கலாட்டின் கானுக்கு அழுத்தம் கொடுத்து வலுக்கட்டாயமாக பாகிஸ்தான் கைப்பற்றியதாக BLA அமைப்பினர் கூறுகின்றனர்.

2000ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பினர், பாகிஸ்தானில் இருந்து பலூசிஸ்தான் தனி நாடாக பிரிய வேண்டும் எனக் கோருகின்றனர். பாகிஸ்தான் மத்திய அரசு பலூசிஸ்தானில் உள்ள கனிம வளங்களை சுரண்டி எடுத்துக்கொள்கிறது, ஆனால் மொழி சிறுபான்மையினராக இருக்கும் பலூசிஸ்தான் மக்கள் முன்னேற்றம் அடையாமல் இருக்கின்றனர் என்ற கருத்தை முன்வைக்கிறது.

பாகிஸ்தான் 2006ம் ஆண்டு BLA அமைப்பை தடை செய்தது. 2019ம் ஆண்டு அமெரிக்கா உலகளாவிய தீவிரவாத அமைப்பாக அறிவித்தது. கடந்த 2022ம் ஆண்டு பாகிஸ்தான் இராணுவம் கடற்படை மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் தங்களது பலத்தை வெளிக்காட்டியது BLA. அன்று முதல் பாகிஸ்தான் அரசுக்கு முக்கிய அபாயமாக உள்ளது.

இதுவரை பலூசிஸ்தான் வரும் பாதுகாப்பு படையினர் மட்டுமல்லாமல், பிற இடங்களுக்கு செல்லும் வாகனங்களையும் BLA அமைப்பினர் இதுவரை குறிவைத்து தாக்கியுள்ளனர்.

சீனாவுக்கு எதிர்ப்பு!

BLA கிளர்ச்சியாளர்கள் பாகிஸ்தான் இராணுவத்தை எதிர்ப்பதோடு, சீன மூலதனத்தையும் எதிர்க்கின்றனர். சீனா கடன் கொடுத்து உதவுவது, நாட்டை இன்னும் மோசமான நிலைக்கே ஆளாக்கும் என BLA கருதுகிறது.

இதற்கு முன்னர் பலூசிஸ்தான் பகுதியில் பணியாற்றிவந்த சீனர்களையும் கொலை செய்துள்ளனர்.

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் திட்டத்தின் மூலம் சீனா முதலீடு செய்யவிருக்கும் 65 பில்லியன் அமெரிக்க டாலர்களில் பெரும்பகுதி பலூசிஸ்தானில் முதலீடு செய்யப்பட உள்ளது.

ஏற்கெனவே சீனா பலூசிஸ்தானில் தங்க மற்றும் காப்பர் சுரங்கத்தை நடத்தி வருகிறது. இந்த மாகாணத்தில் உலகின் மிகப் பெரிய தங்க மற்றும் செம்பு வயல் இருப்பதாக சிலர் நம்புகின்றனர்.

Balochistan Flag பலூச் போராட்டங்களுக்கு இந்தியா ஆதரவு?

10 ஆண்டுகளுக்கும் மேலான BLA-வின் கிளர்ச்சியினால் பாகிஸ்தான் முதலீடுகளைப் பெறுவதிலும் திட்டங்களை செயல்படுத்துவதிலும் திணறி வருகிறது. குறிப்பாக கனிம வளங்களை எடுக்கும் திட்டங்களுக்கும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

BLA நடவடிக்கைகளால் மாகாண மக்கள் நிலையற்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் என பாகிஸ்தான் அரசு தெரிவிக்கிறது.

பலூச் ஆதரவான போராட்டங்களில் பெண்கள் அதிகமாக ஈடுபடுகின்றனர். அவர்கள் பாதுகாப்பு படையினரின் பாலியல் அத்துமீறலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. ஆனால் அரசாங்கம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. பாகிஸ்தான் அரசாங்கம் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் பலூச் விடுதலை படைக்கு ஆதரவளிப்பதாக குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்தியாவின் உளவு அமைப்பான RAW பலூச் விடுதலைப் படைக்கு நிதியுதவி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இந்தியா இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.