பிரபல நடிகையான சௌந்தர்யா கடந்த 2004-ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி விமான விபத்தில் உயிரிழந்தார். உயிரிழக்கும் போது சௌந்தர்யா கர்ப்பமாக இருந்தார். இந்த விபத்தில் சௌந்தர்யாவின் உடல் கிடைக்கவில்லை. ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த சிட்டி மல்லு என்பவர் விபத்தினால் சௌந்தர்யா இறக்கவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, சௌந்தர்யாவின் மரணம் விபத்தால் நடந்தது இல்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம். சௌந்தர்யாவுக்கு ஜல்வள்ளி கிராமத்தில் 6 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை வாங்க நடிகர் மோகன் பாபு முயற்சி செய்துள்ளார். ஆனால் சௌந்தர்யாவின் சகோதரரான அமர்நாத் என்பவர் நிலத்தை விற்பனை செய்ய மறுப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து சௌந்தர்யாவின் மரணத்திற்கு பிறகும் அந்த நிலத்தை தருமாறு மோகன் பாபு தொந்தரவு செய்துள்ளார். அதன் பிறகு மோகன் பாபு சட்ட விரோதமாக அந்த நிலத்தை ஆக்கிரமித்து விட்டார்.
எனவே அந்த நிலத்தை அவரிடமிருந்து மீட்டு ஆதரவற்றோர், ராணுவத்தினர், போலீசார் ஆகியோரின் நலனுக்கு வழங்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் புகார் அளிக்கப்பட்டதால் மோகன் பாபு தரப்பிலிருந்து மிரட்டல்கள் வரலாம். எனவே தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். சௌந்தர்யா இறந்து 22 ஆண்டுகள் ஆன பிறகு மரணம் தொடர்பாக புதிய வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.