இன்று இரவு தமிழகத்தில் 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த இரு தினங்களாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாளை மார்ச் 13 ம் தேதி முதல் மார்ச் 18ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நாளை மார்ச் 13ம்m தேதி ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் கூறியுள்ள நிலையில், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நாமக்கல், கரூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் லேசான இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.