கரூர் மாவட்டம், குளித்தலை பேருந்து நிலையத்தில் குளித்தலை நகர தி.மு.க சார்பில் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு மற்றும் தமிழ்நாட்டில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தி.மு.க கரூர் மாவட்ட செயலாளரும், மின்சாரத் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமை ஏற்று பொதுக்கூட்டத்தில் பேசுகையில்,
"தமிழ்நாட்டின் அரசியல் கோமாளி பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை. மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கும் அவர் லண்டனுக்கு படிப்பிற்காக சென்றபோது இந்தி பேசினாரா அல்லது ஆங்கிலம் பேசினாரா என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். அவர் காலையில் ஒரு பேச்சு, மதியம் ஒரு பேச்சு, இரவு ஒரு பேச்சு என்று பேசுவதோடு, அப்படி தான் பேசிய பேச்சினை கூட அடுத்த நாள் மறந்து பேசக் கூடியவர். தமிழ்நாட்டு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். ஆனால், தான் கூறிய திட்டம் ஒன்று அதை செயல்படுத்துவது ஒன்று என்று மாறி மாறி மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து இந்திய நாட்டு மக்களை ஏமாற்றக்கூடிய கூட்டம் பா.ஜ.க அரசு.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் பலவற்றினை காப்பி அடித்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அந்த திட்டத்தினை செயல்படுத்துவதாக கூறி மக்களிடம் வாக்குகளை பெறுகிறார்கள். இந்தியா மட்டுமல்ல, உலகத்திற்கே பல்வேறு திட்டங்களை எடுத்துக்காட்டாக செயல்படுத்தியவர் தமிழ்நாடு முதலமைச்சர்" என்றார்.
அதனைத்தொடர்ந்து, தலைமை செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா பேசுகையில்,
"பி.ஜே.பி அரசு மறைமுகமாக விஸ்வகர்மா என்ற குலத் தொழிலை அடிப்படையாகக் கொண்டு கல்விக் கொள்கையை தயாரிக்கிறது. கல்வி நிதியாக அளிக்க வேண்டிய தொகையை பிரதமர் அப்பா வீட்டின் பணத்தினையோ, நிர்மலா சீதாராமனின் மாமனார் வீட்டின் பணத்தினையும், தர்மேந்திர பிரதானின் வீட்டின் பணத்தினையும் கேட்கவில்லை. தமிழக மக்கள் ஒவ்வொருவரும் செலுத்திய ஜி.எஸ்.டி வரியை உங்கள் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு உருப்படாத உத்திரபிரதேச மாநிலத்திற்கு அதிக தொகையை அளிக்கிறீர்கள். நாங்கள் உங்களிடம் எங்களது உரிமையை தான் கேட்கிறோம். தமிழன் என்றும் உங்களிடம் பிச்சை கேட்க மாட்டான்" என்றார்.
Vikatan WhatsApp Channelஇணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK