தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
2026ம் ஆண்டு தேர்தல் நெருங்குவதால் இந்த பட்ஜெட் பெரிதும் கவனிக்கத்தக்க பட்ஜெட்டாக இருந்தது. மகளிர், மாணவர்கள், மருத்துவத்துறை, நீர்வளத் துறை, தொழில்துறை எனப் பல்வேறு துறைகளில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.
கல்லூரி மாணவிகளுக்கு கணினி. 40,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும், திருவான்மியூர் - உத்தண்டி 4 வழித்தட உயர்மட்டச் சாலை, 1000 ஆண்டு பழைமையான கோயில்களுக்கு திருப்பணி, ரூ.1051 கோடியில் 5256 குடியிருப்புகள், 10 லட்சம் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கிக் கடன் உதவி, சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம்,
1125 மின் பேருந்துகள், அனைத்து மாநகராட்சியிலும் முதல்வர் படைப்பகம், இராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம், அன்புச்சோலை : 25 இடங்களில் முதியோர் பகல்நேர பராமரிப்பு மையம், சென்னை: மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் எனப் பல திட்டங்களை அறிவித்திருக்கிறது தி.மு.க தலைமையிலான தமிழ்நாடு அரசு.
இந்நிலையில் இந்த பட்ஜெட் குறித்த விவாதங்கள் சமூக வலைதளம், ஊடகங்களில் தொடங்கிவிட்டன. இந்த பட்ஜெட்டைப் பாராட்டி ஒருதரப்பும், விமர்சித்து மறுதரப்பும் கருத்துத் தெரிவித்து வருகின்றன.
அவ்வகையில் தமிழக 'பா.ஜ.க' தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், "இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டைக் குறித்துச் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது. தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது. ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகள் உயர்ந்துள்ளது. திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது திமுக." என்று கூறியிருக்கிறார்.