தமிழகத்தில் 2025 - 26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 5 லட்சம் சதுர அடியில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டைடல் பார்க் அமைக்கப்படும். ஓசூர் நகரத்தை ஒட்டி ஒசூர் அறிவுசார் பெருவழிதடமும் அமைக்கப்படும் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு ஒசூர் பகுதியில் படித்த, பட்டதாரி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டைடல் பாரக் மூலம் புதிய வேலை வாய்ப்புக்கள் அதிகரிப்பதுடன் ஒசூர் பகுதியினர் பெங்களூருக்கு போக்குவரத்து நெரிசலில் சென்று வருவதை தவிர்க்கப்படும் என்கின்றனர். இதேபோல் விருதுநகரில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.366 கோடியில் சிட்கோ 9 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும். இதன் மூலம் 17,500 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்றும் 250 ஏக்கரில் திருச்சியில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்கா உருவாக்கப்படும். இதன்மூலம், 5,000 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.250 கோடியில் மதுரை, கடலூரில் காலணித் தொழிற்பூங்கா உருவாக்கப்படும். இதன்மூலம், 20,000 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.