நாளை பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்... நாசா அறிவிப்பு!
Dinamaalai March 15, 2025 11:48 AM

நாளை மார்ச் 16ம் தேதி விண்வெளியில் தங்கி ஆய்வு செய்து வரும் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப இருப்பதாக நாசா அறிவித்துள்ளது. 

பூமியில் இருந்து இந்திய வம்சாவளியினரான சுனிதா வில்லியம்ஸும்ம், புட்ச் வில்மோரும், விண்வெளிக்கு சென்று தங்கி ஆய்வு செய்ய கடந்த ஜூன் 5, 2024 அன்று போயிங்கின் ஸ்டார்லைனரில் 10 நாள் பயணமாக சென்றனர். ஆனால் இருவரும் ஒன்பது மாதங்களாக விண்வெளி நிலையத்தில் இருந்து திரும்ப இயலாமல் தவித்து வருகின்றனர்.

இவர்கள் சென்ற ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக இவர்களால் கடந்த 9 மாதங்களாக விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்ப முடியவில்லை. ராக்கெட் பூமியில் பத்திரமாக தரையிறங்க த்ரஸ்டர் எனப்படும் அமைப்பு பயன்படும். இந்த ராக்கெட்டில் த்ரஸ்டரில்தான் பிரச்சினை ஏற்பட்டது. இதன்காரணமாக இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்க தொடர் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. பலரும் சுனிதாவையும், வில்மோரையும் பத்திரமாக மீட்க வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கினர்.

இதற்கிடையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. நான் ஜனாதிபதியானால் சுனிதா வில்லியம்ஸ்சை மீட்டு பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவேன் என டிரம்ப் கூறியிருந்தார். அதே போல, ஜனாதிபதியான பின்னர் சுனிதா வில்லியம்ஸை உடனடியாக மீட்க எலான் மஸ்க்குக்கு டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து மீட்பு பணிகள் வேகமடைந்தன.

இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் எலான் மஸ்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தின் மூலம் நாளை மார்ச் 16ம் தேதி பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.