தமிழ்நாடு பட்ஜெட் 2025: ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அறிவிப்பு
BBC Tamil March 15, 2025 01:48 PM
TN ASSEMBLY

தமிழ்நாடு அரசின் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு.

திருக்குறள் மொழிபெயர்ப்புக்கு ரூ.133 லட்சம் ஒதுக்கீடு முதல் சென்னை அருகே புதிய நகரம் உருவாக்கப்படுவது வரை பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ் வளர்ச்சிக்கான பட்ஜெட்

திருக்குறளை 45 புதிய மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.133 லட்சம் ஒதுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

வருங்காலங்களில் தமிழ் புத்தகக் கண்காட்சிகளை இந்திய பெருநகரங்கள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா, துபாய் ஆகிய வெளி நாட்டின் நகரங்களிலும் நடத்த ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு நூறு புத்தகங்கள் வீதம் வருகின்ற ஐந்து ஆண்டுகளில் 500 தமிழ்ப் புத்தகங்களை மற்ற மொழிகளில் மொழிபெயர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் இளைய தலைமுறையினருக்கு தமிழ் மரபை முறையாக அறிமுகம் செய்திடும் வகையில், அயலக தமிழர் நல வாரியம் மூலம் அவர்களுக்கு தமிழ் மொழி மற்றும் நாட்டுப்புறக் கலையைப் பயிற்றுவிக்கும் 100 தமிழ் ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களை வைத்து நேரடி வகுப்புகளை நடத்திட ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழின் பெருமை மற்றும் சிறப்பை உலகத் தமிழ் இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பிற நகரங்களில் உள்ள பள்ளிகளிலும், உலகத் தமிழ் மையங்களிலும் பயிலும் மாணவர்களுக்கு கணினி வழி உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ. 1 கோடி வழங்கப்படும்.

Thangam Thennarasu/X ஆல்தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலினுடன் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு (கோப்புக் காட்சி) தொல்லியல் துறை அறிவிப்பு
  • தமிழ்மொழியின் தொன்மை மற்றும் தொடர்ச்சியினை அறிந்து கொள்ளும் வகையில், அகரம் - மொழிகளின் அருங்காட்சியகம் ஒன்று மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் அமைக்கப்படும்.
  • அகழ்வாராய்ச்சியில் வெளிக்கொணரப்பட்ட தொல்லியல் பொருட்களில் தொல் மரபணுவியல், உலோகவியல் பகுப்பாய்வு, நுண் தாவரவியல், மகரந்த பகுப்பாய்வு, தூண்டொளி வெப்பக் காலக் கணிப்பு, மட்பாண்டவியல் உள்ளிட்ட உயர்தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்காக, வரும் நிதி ஆண்டில் தொல்லியல் ஆராய்ச்சி மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ரூ. 7 கோடி நிதி ஒதுக்கப்படும்.
  • தென்கிழக்கு ஆசியா, மத்தியத் தரைக்கடல், அரேபிய தீபகற்பம், ரோமப் பேரரசு பகுதிகளுடன் வைத்துக்கொண்ட கடல் வழி வணிகம் தொடர்பாக ஆழ்கடல் அகழ்வாய்வுகளை தமிழ்நாடு கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதல்கட்டமாக இந்த ஆண்டு தொல்லியல் ஆய்வாளர்களின் அறிவுரைப்படி காவிரிப்பூம்பட்டினம் முதல் நாகப்பட்டினம் வரை ஆழ்கடல் அகழ்வாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • ஐம்பொன்னால் ஆன இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செப்புத் திருமேனிகள் எழும்பூர் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன. அதன் சிறப்பை வெளிநாட்டினரும் ரசிக்கும் வகையில், மரபுசார் கட்டட அமைப்பில் தனியாக காட்சி அரங்கம் ஒன்று எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைக்க ரு. 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • கொடுமணல் அகழாய்வுகளை முன்னிலைப்படுத்தி ஈரோடு மாவட்டத்தில், நொய்யல் அருங்காட்சியம் ரூ.22 கோடி மதிப்பீட்டிலும், சங்ககாலப் பாண்டியரின் கடல்வழி வணிகச் சிறப்பை விளக்கிடும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நாவாய் அருங்காட்சியகம் ரூ. 21 கோடி மதிப்பீட்டிலும் உருவாக்கப்படும்
TNDIPR ஈரோட்டில் நொய்யல் அருங்காட்சியம் ரூ.22 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் (சித்தரிப்புப் படம்) ஊரக வளர்ச்சி திட்டத்திற்கான அறிவிப்புகள்
  • இந்த நிதியாண்டில் (2025-26) ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி ஒதுக்கீடு
  • முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 6,100 கிலோமீட்டருக்கு கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ. 2100 கோடி ஒதுக்கீடு
  • கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய சாலைகளின் பராமரிப்புப் பணிகளுக்காக ரூ.120 கோடி ஒதுக்கீடு
  • தமிழ்நாட்டின் அனைத்து குக்கிராமங்களும் தன்னிறைவு அடையும் வகையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உருவாக்கப்பட்ட அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 2329 கிராம ஊராட்சிகளில் ரூ.1087 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும்.
நகராட்சி நிர்வாகம்
  • கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் எடுக்கப்பட்டுள்ள பணிகளுக்காக ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 6483 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ.3750 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சென்னை மாநகராட்சியில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைத் தடுக்கும் ஒரு பகுதியாக வேளச்சேரி மற்றும் கிண்டியில் வசிக்கும் 7 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் வேளச்சேரி பிரதான சாலை துவங்கி, குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 3 கி.மீ. நீளத்திற்கு ரூ. 310 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்படும்.
  • ரயில்வே துறையுடன் இணைந்து கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம் ரூ. 70 கோடி மதிப்பில் கட்டப்படும்.
  • சென்னை பெருநகர மாநகராட்சியின் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் உயிரி எரிவாயு நிலையம், இயற்கை உரம் தயாரிக்கும் நிலையம், தானியங்கி பொருள் மீட்பு மையம் மற்றும் 21 மெகாவாட் திறன் கொண்ட திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பணிக்காக ரூ. 3450 கோடி திட்டக் காலத்திற்கான மதிப்பீட்டில் தொடங்கப்படும்.
@CMOTamilnadu மார்ச் 13ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்ட தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சமச்சீர் வளர்ச்சி

சென்னை மாநகரத்தின் சமச்சீர் வளர்ச்சியை உறுதி செய்திட வடசென்னை வளர்ச்சித் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிதியாண்டில் அதற்காக ரூ.6,858 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பொது மக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்குவதன் முதல்கட்டமாக சென்னைக்கு அருகே ஒரு புதிய நகரம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும்.

மகளிர் நலன்
  • விடியல் பயணம் என்பது பேருந்தில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணிக்க அறிமுகம் செய்யப்பட்ட திட்டம். அந்த ஆண்டு அந்தத் திட்டத்திற்கான மானியத் தொகை ரூ.3600 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • எதிர்வரும் நிதியாண்டில் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 37 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • காஞ்சிபுரம், ஈரோடு, கரூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 இடங்களில் புதிதாக தோழி மகளிர் விடுதிகள் கட்ட ரூ.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • உயர் கல்விக்காக பெரு நகரங்களுக்கு வருகை புரியும் மாணவிகளுக்காக சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகரங்களில் தலா ஆயிரம் மாணவியர் தங்கும் வகையில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய மூன்று மாணவியர் விடுதிகள் ரூ.275 கோடி மதிப்பில் கட்டப்படும். இந்த விடுதிகளின் மாணவியர் சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படும்.
  • புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை திருநர் சமூகத்தினருக்கும் விரிவுபடுத்தப்படும்.
பள்ளிக்கல்வி துறை
  • இந்த நிதியாண்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.46,767 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2025-26ஆம் ஆண்டில் அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், குடிநீர் வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் பொருட்டு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • பழங்குடியின மாணவர்களின் இடைநிற்றலைக் குறைக்கும் நோக்கத்தோடு அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே உயர் கல்வியைப் பெறும் வகையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், தாளவாடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், கல்வராயன் மலை, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை உள்ளிட்ட இடங்களிலுள்ள தொலைதூர மலைப்பகுதிகளில் அமைந்துள்ள 14 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
  • சேலம், கடலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு லட்சம் புத்தகங்கள் மற்றும் மாநாட்டுக் கூடங்களுக்கான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய நூலகங்கள் அமைக்கப்படும்.
உயர்கல்வி MK Stalin தேசிய இலச்சினை நீக்கப்பட்டு தமிழில் 'ரூ' பயன்படுத்தப்பட்டுள்ளது
  • இந்த நிதியாண்டில் உயர்கல்வித் துறைக்காக ரூ.8,494 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அரசுப் பல்கலைக் கழங்களில் நிதிப் பற்றாக்குறையை குறைக்கும் வகையில், பல்கலைக் கழகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பு நிதி நல்கை ரூ.700 கோடியாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் சேர 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதன் கீழ் தற்போது 41,038 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். அவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும் வகையில் ரூ.550 கோடி ஒதுக்கீடு.
  • குன்னூர், நத்தம், ஆலந்தூர், விக்கிரவாண்டி, செய்யூர், மானாமதுரை, முத்துப்பேட்டை, திருவிடைமருதூர், பெரம்பலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 10 இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்
  • அறிவியல் சிந்தனையை வளர்த்திடவும், புதிய தொழில்நுட்ப வசதிகளைத் தொடர்ந்து அறிமுகம் செய்திடும் நோக்கத்தோடும் சென்னை அறிவியல் மையம் ரூ.100 கோடி மதிப்பில் உருவாக்கப்படும்.
  • செயற்கை நுண்ணறிவு இந்த உலகை மாற்றும் சூழலில், தொழில்நுட்ப அறிவு மற்றும் திறனை மேம்படுத்தும் வகையில் முதற்கட்டமாக 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் லேப்டாப் அல்லது டேப்லட் வழங்கப்படும். இதற்காக இந்த நிதியாண்டில் ரூ. 2000 கோடி ஒதுக்கப்படும்.
பெண் குழந்தைகளுக்கு ஹெச்.பி.வி. தடுப்பூசி - ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ. 21,906 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க 14 வயது பூர்த்தியான அனைத்து பெண் குழந்தைகளுக்கும் ஹெச்.பி.வி. தடுப்பூசியை படிப்படியாக வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ. 36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதில் தேசிய நலவாழ்வுக் குழுமம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு ரூ.2754 கோடியும், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்திற்கு ரூ.1092 கோடியும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ. 1461 கோடியும், அவசர ஊர்தி சேவைகளுக்காக ரூ.348 கோடியும் இந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

Getty Images ஹெச்.பி.வி. தடுப்பூசியை பெண் குழந்தைகளுக்கு வழங்க ரூ. 36 கோடி நிதி தொழிற்துறை

சென்னையில் ரூ.100 கோடி மதிப்பில் செமி கண்டக்டர் உயர்திறன் வடிவமைப்பு மற்றும் பரிசோதனை மையம் உருவாக்கப்படும்.

கோவை-சூலூர் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவிலும், பல்லடம் அருகே 100 ஏக்கர் பரப்பளவிலும் செமி கண்டக்டர் உற்பத்திக்கான இயந்திரத் தொழிற் பூங்காக்கள் உருவாக்கப்படும்.

ஓசூரில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் டைடல் பூங்கா ஒன்று அமைக்கப்படும். விருதுநகர் மாவட்டத்தில் புதிய மினி டைடல் பூங்கா ஒன்றும் அமைக்கப்படும்.

கடலூரில் இரண்டு காலணி தொழிற்பூங்காக்கள் ரூ.250 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.

9 இடங்களில் ரூ. 366 கோடி மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டைகள் சிறுதொழில் முன்னேற்றக் கழகத்தால் (SIDCO) உருவாக்கப்படும்.

Getty Images ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் , , (டிவிட்டர்) மற்றும் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.