இந்தியை எதிர்ப்பவர்கள், தமிழ் படங்களை ஏன் இந்தியில் டப் செய்கிறீர்கள்? பவன் கல்யாண்
Webdunia Tamil March 15, 2025 02:48 PM



தமிழ்நாட்டில், ஒரு பக்கம் ஹிந்தியை எதிர்த்து வருகின்றீர்கள். ஆனால் அதே நேரத்தில், தமிழ் திரைப்படங்களை ஹிந்தியில் டப் செய்து வெளியிடுகிறார்கள். ஹிந்தியை எதிர்ப்பவர்கள், "ஏன் தமிழ் படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்கிறீர்கள்?" என ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள காக்கிநாடாவில், துணை முதல்வர் பவன் கல்யாண் பேசும் போது, "தமிழ்நாட்டில் ஹிந்தியை எதிர்க்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில், நிதி ஆதாயத்திற்காக தமிழ் படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்ய அனுமதிக்கிறார்கள். இதில் என்ன லாஜிக் உள்ளது?" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், "சிலர் சமஸ்கிருதத்தை ஏன் விமர்சிக்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. மக்கள் பல மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும்," என்றும் அவர் தெரிவித்தார்.

அவருடைய இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது, மும்மொழி கொள்கையால் அது மீண்டும் சூடு பிடித்துள்ள நிலையில், "தமிழகத்தில் ஹிந்தியை அனுமதிக்கவே மாட்டோம்" என தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் கூறி வருகின்றன.

ஆனால், அதே நேரத்தில், பொதுமக்களிடையே ஹிந்திக்கு பெரிய அளவில் எதிர்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், ஏராளமானவர்கள் தனியாக ஹிந்தியை கற்றுக்கொண்டு வருகிறார்கள்.

அரசு தொடர்ந்து ஹிந்தியை எதிர்த்துக் கொண்டிருப்பது தான் முக்கிய பிரச்சனையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.