கையில் 400 ரூபாய்.. சென்னைக்கு பஸ் ஏறிய அந்த நாள்!.. பிளாஷ்பேக் சொல்லும் இளையராஜா!..
CineReporters Tamil March 15, 2025 02:48 PM

Ilayaraja: சினிமாவில் எந்த துறையில் நுழைய வேண்டும் என்றாலும் சென்னைக்குதான் வரவேண்டும். ஏனெனில், இயக்குனர்கள், பெரும்பாலான தயாரிப்பாளர்கள், நடிகர்கள், சினிமாவில் வாய்ப்பை வாங்கி கொடுப்பவர்கள், சினிமா ஸ்டுடியோக்கள், தயாரிப்பு நிறுவனங்கள் என எல்லாமே அங்குதான் இருக்கிறது. எனவேதான், சினிமாவில் நுழைய விரும்புபவர்கள் எல்லோருமே சென்னையை நோக்கி போகிறார்கள்.

பெரும்பாலும் மதுரை, கோவை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சினிமாவில் அதிகம் இருப்பார்கள். இப்போது அது கொஞ்சம் மாறியிருக்கிறது. 70,80களில் சினிமாவில் கோலோச்சியவர்கள் பலரும் இந்த 2 மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். பாரதிராஜா, வைரமுத்து, இளையராஜா ஆகியோர் கூட மதுரை மாவட்டங்களை சேர்ந்தவர்கள்தான்.


இசைஞானி இளையராஜா இசையில் எதாவது சாதிக்க வேண்டும் என்கிற கனவில் பண்ணைபுரத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்தது பற்றி இப்படி சொல்கிறார்:

ஊரில் அண்ணன் பாஸ்கரோடு இணைந்து கம்யூனிஸ்ட் மேடைகளில் இசைக்கச்சேரிகளை நடத்திக்கொண்டிருந்தேன். பல இடங்களில் எங்கள் கச்சேரி நடக்கும். சினிமா இசை மீது அதிக ஆர்வம் இருந்தது. சென்னை சென்றால்தான் நிறைய விஷயங்களை கற்றுகொள்ள முடியும் என்கிற நிலை. எங்களுக்கு முன் பாரதிராஜா சென்னைக்கு போய்விட்டார். நடிக்க ஆசைப்பட்டு அங்கு போய் அது முடியாமல் நாடகங்களை போட்டு கொண்டிருந்தார்.

அதேபோல், என் நண்பனான கதாசிரியர் செல்வராஜும் அடிக்கடி சென்னை போய் விட்டு ஊருக்கு திரும்பி வருவான். கையில் கொஞ்சம் காசு சேர்த்து சென்னை போவான். அந்த காசு தீர்ந்து போனதும் திரும்பி வந்துவிடுவான். நாங்கள் சென்னைக்கு செல்வது என முடிவு செய்ததும் என் அம்மா 400 ரூபாயை கையில் கொடுத்து அனுப்பினார்.


‘உங்கள் செலவுக்கு 50 ரூபாய் வைத்து கொள்ளுங்கள்’ என்று கூட நாங்கள் சொல்லவில்லை. அந்த அளவுக்கு நல்ல பிள்ளைகளாக இருந்தோம். தேனியிலிருந்து மதுரைக்கு பஸ் ஏறினோம். எங்களை வழி அனுப்ப வந்த செல்வராஜ் ‘போங்கடா போங்க.. அங்கு போனா உங்களுக்கு தெரியும். நான் பின்னாலயே வரேன்’ என சொன்னன். பேருந்து சென்று கொண்டிருந்தபோது ‘இந்த பணம் போதாது.. மதுரையில் சில நாட்கள் தங்கி இசைக்கச்சேரிகளை செய்து கொஞ்சம் காசு சம்பாதித்து அதன்பின் சென்னை போகலாம் என நான் சொன்னேன். பாஸ்கரும் சம்மதித்தான்.

மதுரையில் இறங்கி எங்களுக்கு தெரிந்த நண்பர்கள் வட்டாரத்தில் சென்று பேசினோம். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. நாம் வாழ்வில் முன்னேற யாரும் உதவி செய்ய மாட்டார்கள். நாம்தான் நமக்கு உதவி செய்து கொள்ளவேண்டும் என்கிற பெரிய பாடம் எனக்கு அன்று புரிந்தது. அன்று இரவே சென்னைக்கு பஸ் ஏறிவிட்டோம்’ என சொல்லியிருக்கிறார்.

அந்த செல்வராஜ் எழுதிய அன்னக்கிளி கதையில்தான் இளையராஜா முதன் முதலாக இசையமைப்பாளராக அறிமுகமானதுதான் காலத்தின் சுவாரஸ்யம்!..

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.