கடந்த மாதம் வெளியான `டிராகன்' திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு 100 கோடி வசூலையும் அள்ளியது. இயக்குநராக சினிமாவில் அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் `லவ் டுடே', `டிராகன்' என இரண்டு திரைப்படங்களிலும் நடிகராக உருவெடுத்து முத்திரைப் பதித்திருக்கிறார். நடிகர்களாக மாறிய இயக்குநர்களை வைத்து இயக்குவது எப்போதும் அப்படத்தின் இயக்குநர்களுக்கு ஸ்பெஷலான விஷயம்தான். இப்படியான அனுபவத்தை பல முன்னணி இயக்குநர்களும் பல பேட்டிகளில் பகிர்ந்திருக்கிறார்கள். `டிராகன்' திரைப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், கெளதம் மேனன், மிஷ்கின், பிரதீப் ரங்கநாதன் என மொத்தமாக நான்கு இயக்குநர்களை வைத்து இயக்கியிருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து. அதிலும் இதுவரை நாம் பார்த்திடாத கெளதம் மேனனின் நடனத்தையும் இத்திரைப்படத்தில் அஸ்வத் மாரிமுத்து காட்சிப்படுத்தியிருந்தார். படத்தின் மையக்கருவும் மிஷ்கினின் கதாபாத்திரம் சார்ந்தே நகர்ந்திருந்தது.
இது குறித்து பதிவிட்டிருக்கும் அஸ்வத் மாரிமுத்து, `` நினைவில் கொள்ள வேண்டிய தருணம் இது. நடிகர்களாக மாறிய வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த நான்கு தனித்துவமான இயக்குநர்களை வைத்து இயக்கியது அழகான ஒன்று!" எனப் பதிவிட்டிருக்கிறார். `டிராகன்' படத்தை தயாரித்த இதே ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து தன்னுடைய அடுத்த படத்தை சிம்புவை கதாநாயகனாக வைத்து இயக்கவிருக்கிறார். இது சிம்புவின் 51-வது படம் என்பது குறிப்பிடதக்கது.