விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுகவினர் வல்லவர்கள் - ஈபிஎஸ் பேட்டி!
Top Tamil News March 15, 2025 08:48 PM

விவசாயிகளுக்கென தனியாக வேளாண் பட்ஜெட் என்பது போலியானது, தவறு செய்ய வசதியான திட்டங்கள்தான் பட்ஜெட்டில் உள்ளன என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வேளாண் துறை சார்ந்த பல துறைகளை ஒன்றாக இணைத்து அவியல் போல ஒரு பட்ஜெட்டை அறிவித்துள்ளனர். விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுகவினர் வல்லவர்கள். விவசாயிகளுக்கென தனியாக வேளாண் பட்ஜெட் என்பது போலியானது. தவறு செய்ய வசதியான திட்டங்கள்தான் பட்ஜெட்டில் உள்ளன. விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் திட்டங்கள் எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்தான் இதில் பல உள்ளன. 5வது முறையாக வேளாண் பட்ஜெட்டை 1.30 மணி நேரம் வாசித்து சாதனை படைத்துள்ளனர். 

திமுக தேர்தல் அறிக்கையில் நிதி மேலாண்மை என்றொரு குழு அமைக்கப்பட்டது; அந்த அறிக்கை என்ன சொன்னது என எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த குழு அமைத்த பின்தான் தமிழ்நாடு அரசு அதிக அளவில் கடன் வாங்கியுள்ளது.  இந்த அரசு கடனில் மூழ்கிக்கொண்டுள்ளது. இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழ்நாடு உருவாகி உள்ளது. இதுதான் ஸ்டாலின் அரசின் பெருமை என கூறினார். 
 
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.