தமிழ்நாட்டில் சட்டப்பேரவையில் இன்று மார்ச் 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். , இந்த வேளாண் பட்ஜெட் குறித்து பல அரசியல் தலைவர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்டுமாக ஒன்றை தாக்கல் செய்துள்ளது திமுக அரசு. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். திமுகவின் பட்ஜெட் மொத்தமுமே பொய்களும் புரட்டுகளுமாகத்தான் உள்ளது. இத்தனை நாட்களாக, மக்களின் வரிப்பணத்தை வீணடித்ததுதான் மிச்சம்.
கடந்தாண்டு வேளாண் பட்ஜெட்டில் தமிழகத்தில் மொத்த சாகுபடிப் பரப்பு, 155 லட்சம் ஏக்கர் என்று கூறினார்கள். ஆனால், இந்தாண்டு அது, 151 லட்சம் ஏக்கராக உள்ளது என்று கூறியுள்ளனர். சாகுபடிப் பரப்பு, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4 லட்சம் ஏக்கர் குறைந்துள்ளது என்பது தான் உண்மை. ஆனால், அதை மறைக்க 4 ஆண்டுகளுக்கு முன்புள்ள 2019 – 2020 சாகுபடிப் பரப்பை விட இந்தாண்டு உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
ஏன்? தமிழக மக்களை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது திமுக? பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று நாங்கள் கூறியபோது, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அம்புலிமாமா கதைகளைக் கூறிச் சென்றார். இன்றைய வேளாண் பட்ஜெட்டில், பயிர்க்கடன் ரூ.1,774 கோடி இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.