தமிழகத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தி திணிப்பு விவகாரம் குறித்து நேற்றைய தினம் ஜன சேனா கட்சியின் தலைவரும் , ஆந்திரா மாநிலத்தின் துணை முதல்வருமான பவன் கல்யாண் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜன சேனா கட்சி தொடங்கப்பட்டு 12 ஆண்டுகள் கடந்துள்ளதை ஒட்டி நேற்றைய தினம் நிகழ்வு ஒன்றையும் திட்டமிட்டு பிதாபுரம் சட்டமன்ற தொகுதியில் நடத்தியிருக்கிறார்கள். இந்த மேடையில் பவன் கல்யாண் பேசிய விஷயம் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.
அவர், `` தென்னிந்தியாவில் இந்தி மொழியை திணிப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அனைத்து மொழிகளும் நமது இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதி இல்லையா? தமிழ்நாடு தொடர்ந்து இந்தியை நிராகரிக்கிறது. அவர்களுக்கு இந்தி மொழி தேவையில்லை எனக் கூறுகிறார்கள். அப்படியென்றால், ஏன் தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்கிறார்கள்? உத்தரப்பிரதேசம், பீகார், சத்தீஸ்கர் போன்ற இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து பணமும் தேடுகிறார்கள். மேலும், பீகாரிலிருந்து தொழிலாளர்களையும் நம்பியிருக்கிறார்கள். இப்படியான விஷயங்கள் இருந்தும் இந்தியை வெறுக்கிறோம் எனக் கூறுகிறார்கள். இது எப்படி நியாயமானதாக இருக்கும். இந்தியா என்பது கோபப்படும்போது பிரிக்கப்படக்கூடிய கேக் துண்டா? இந்தியாவின் ஒருமைப்பாட்டை குறைக்க முயற்சிப்பவர்களை எதிர்க்க என்னைப் போன்ற கோடிக்கணக்கான மக்கள் எழுந்து நிற்போம்." எனக் கூறியிருக்கிறார்.
பவன் கல்யாணின் இந்த கருத்து குறித்து உங்களின் கருத்துக்களை கமெண்டில் பதிவு செய்யுங்கள்...