ஈரோடு மாவட்டம் செண்பகபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட முள்ளிக்காபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி கௌரி. இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். விவசாயியான சிவகுமார் நேற்று முன்தினம் தனது உறவினரின் காரை ஓட்டி பழகியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் 60 அடி ஆழ கிணற்றுக்குள் கவிழ்ந்தது. இதனால் மூச்சு திணறி சிவக்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சிவகுமாரை மீட்க முயற்சி செய்தனர்.
அந்த கார் 40 அடி ஆழ தண்ணீருக்குள் இருந்ததால் காரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் மீட்பு பணிக்காக பவானிசாகர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த மீனவரான மூர்த்தி என்பவர் வந்திருந்தார். அவர் கிணற்றில் குதித்து சிவகுமாரை மீட்க முயற்சி செய்தார். அப்போது அவரும் மூச்சு திணறி உயிரிழந்தார். இதனையடுத்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் கார் மற்றும் இரண்டு பேரின் உடல்களை மீட்டனர். பின்னர் அவரது உடல்கள் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.