மரம் வெட்ட தெரியாதவரை கூட்டிட்டு போய் இப்படி ஆயிடுச்சி..! ஒப்பந்த ஊழியர்கள் 2 பேர் மரணம்
Top Tamil News March 16, 2025 10:48 PM

அம்பத்தூர் தொழில் பேட்டையில் தனியார் நிறுவனத்தின் சுவர் மீது மரங்களை வெட்டிய இருவர் உயிரிழந்த சம்பவத்தால் நள்ளிரவில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. 

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள கெமின் இண்டஸ்ட்ரிஸ் சவுத் ஏசியா பிரைவேட் லிமிடெட் எனும்  தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் சுற்று சுவர் அருகே  அதிகமாக வளர்ந்த மரங்களின் கிளைகள் நிறுவனத்திற்குள் வந்ததால் வெட்டுவதற்காக ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்..ன இதற்காக 5  பேரை மேலாளர் தண்டபாணி என்பவர் மூலம் அழைத்து வந்துள்ளனர். இதில் 3 பேர் மட்டும் மரம் வெட்டும் பணிகளில் ஈடுபட வேண்டும் என மேலாளர் தெரிவித்ததாகவும், ஆனால் முன் அனுபவம் இல்லாத நபர்கள் மரம் ஏறி வெட்டும் பணியில் ஈடுப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மரம் திடீரென்று சாய்ந்ததாக கூறப்படுகிறது. ராட்சத மரக்கிளைகள் சுற்றுச்சுவர் மீது விழுந்ததால் பணி செய்து கொண்டிருந்த நபர்களும் கீழே விழுந்தனர். இதில் தங்கராஜ் மற்றும் விஜயகுமார் மதியம் 1 மணியளவில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தனியார் நிறுவனமும் தொழிற்பேட்டை காவல் துறையினரும் மாலை 5 மணிக்கு  தகவல் தெரிவித்ததாக  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்  மன உளைச்சலில் காவல் நிலையத்தில்  அம்பத்தூர் உதவி ஆணையர், ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினரும் தங்கள் உறவினருடன் சேர்ந்து நீதி கேட்டு தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் கெமின் நிறுவனத்திற்கு சென்று முறையிட்டனர். அப்போது அங்கு யாரும் இல்லாததால் பணியில் இருந்த தனியார் காவலர்களுக்கும் உயிரிழந்த குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. போராட்டத்தில் சாலையில் கிடந்த கற்களைக் கொண்டு அங்கிருந்த கண்காணிப்பு அலுவலகத்தை அடித்து உடைத்து உள்ளே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு போலீசாரும் இல்லாததால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என தெரிந்து கொண்ட தனியார் காவலர்கள் உள்ளே சென்று காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் சரக காவல் உதவி ஆணையர் ரூபன், ஆய்வாளர் கோபிநாத் மற்றும் காவல் துறையினரை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். காவல் துறையினர் அறிவுறுத்தியும் அதனை  பொருட்படுத்தாமல் உறவினர்கள் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபரின் மனைவி தனியார் நிறுவனத்தின்  சுற்றுசுவர் மீது ஏறி குதிக்க முயற்சி செய்து பெரும் கூச்சலிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பான சூழலை அதிகரித்தது. இதனால் கூடுதலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலையில்  போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் அங்கிருந்து கலைக்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தொழிற்ப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் நிறுவன மேலாளர் மற்றும் கண்காணிப்பாளரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.