அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு நடந்த பாராட்டு விழாவை புறக்கணித்த செங்கோட்டையன் சமீபத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும் அதிமுக எம்எல்ஏக்களுடன் சேராமல் சபாநாயகர் அறைக்கு சென்றார். இது பற்றி எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டால் செங்கோட்டையனிடம் கேளுங்கள் என்றார். நேற்று நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செங்கோட்டையன் என்னுடைய பாதை சரியாக இருக்கிறது எனவும், தற்போது தேர்தல் நெருங்கி வருவதால் நான் பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் என்றும் கூறினார்.
செங்கோட்டையன் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் செங்கோட்டையனை புகழ்ந்து ஒரு எக்ஸ் தள பதிவை போட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கொங்கு நாட்டு தங்கம், எனது அரசியல் குருமார்களில் ஒருவர், கழகத்தின் உண்மை தொண்டன், அண்ணன் செங்கோட்டையன் அவர்களின் மனசாட்சியின் உணர்வுகள் வெளிப்பட தொடங்கியுள்ளது என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஏற்கனவே ஜெய பிரதீப் அதிமுகவை விமர்சித்தும் திமுகவை புகழ்ந்தும் சமீபத்தில் ஒரு பதிவு போட்ட நிலையில் தற்போது செங்கோட்டையனை புகழ்ந்து பதிவு போட்டது பரபரப்பாக பேசப்படுகிறது.