பொது ஊழியர்களை அவதூறாக பேசினால் ஆடைகள் களையப்படுவார்கள்: தெலுங்கானா முதல்வர்..!
WEBDUNIA TAMIL March 17, 2025 12:48 AM


பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் பொது ஊழியர்களை அவதூறாக பேசினால், அவர்கள் ஆடை களையப்படுவார்கள் என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து அவதூறு பரப்பிய இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இது குறித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி விளக்கம் அளித்துள்ளார்.

"எனது குடும்ப உறுப்பினர்கள் குறித்து இழிவாக, தவறான வார்த்தைகளை பதிவிட்ட பெண் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டதை பிஆர்எஸ் கண்டித்து வருகின்றனர். தவறான கருத்துக்களை பதிவு செய்தால், கைது செய்யப்படுவார்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

எனது குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு எதிராக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி எழுதும் போது, ஏன் நான் சகிப்பு தன்மையுடன் இருக்க வேண்டும்? பிஆர்எஸ் தலைவர்களின் சகோதரிகள் மற்றும் மனைவிகளை அவமதித்து இவ்வாறு எழுதினால், அவர்கள் அமைதியாக இருப்பார்களா?

பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் பொது ஊழியர்களை பற்றி அவதூறான, ஆட்சேபத்துக்குரிய கருத்துக்களை பதிவு செய்தால், பொது இடங்களில் ஆடைகளை களைந்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவார்கள்" என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Edited by Siva
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.