சென்னை அருகே வடபழனி கோவிலில் நான்கு ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு தலைமையில் திருமணம் நடைபெற்றது. திருமண ஜோடிகளுக்கு ரூபாய் 60 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசைகளை அமைச்சர் சேகர் பாபு வழங்கி வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில், தியாகராய நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜே.கருணாநிதி, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் சி.பழனி, இணை ஆணையர்கள் லட்சுமணன், ரேணுகா தேவி, முல்லை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு தெரிவித்ததாவது:- "வேளாண் பட்ஜெட்டில் பொய்யும் புரட்டும் தான் இருக்கிறது என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகிறார். விலாசமற்ற மற்றும் மக்களின் ஆதரவு பெறாத அண்ணாமலைக்கு பதில் கூற விரும்பவில்லை.
எதை எடுத்தாலும் குறை சொல்லியே பழக்கப்பட்டவர் அண்ணாமலை. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த தலைவர் என்றால் அது அண்ணாமலை தான். வேளாண் பட்ஜெட்டை உண்மையான விவசாய மக்கள் வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள்" என்றுத் தெரிவித்தார்.