தமிழகத்தில் கோவை ஆலந்துறையில் வசித்து வருபவர் மாராத்தாள். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். இவரது கணவர் இறந்த நிலையில், வாரிசு சான்றிதழ் பெற மாராத்தாள் மத்துவராயபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். மத்துவராயம்புரம் கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேல், வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.5000 லஞ்சமாக வேண்டும் என கேட்டுள்ளார். முதல்கட்டமாக ரூ1000 மாராத்தாளிடமிருந்து வெற்றிவேல் வாங்கினார்.
மீதம் உள்ள ரூ.4000 கொடுத்தால் தான் சான்றிதழ் வழங்க முடியும் என வெற்றிவேல் கூறியுள்ளார். இது குறித்து மாராத்தாள் தனது மருமகன் கிருஷ்ணமூர்த்தியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.3,500 யை நோட்டுகளை கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்துள்ளனர். இதையடுத்து பேரூர் வட்டாச்சியர் அலுவலகம் அருகே இரு சக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேலிடம் கிருஷ்ணசாமி பணத்தை கொடுத்துள்ளார்.
அப்போது இதனை கண்காணித்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வெற்றிவேலை மடக்கி பிடித்துள்ளனர். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் தப்பிய வெற்றிவேல் பேரூர் பெரியகுளத்தில் குதித்து லஞ்ச பணத்தை தண்ணீர் போட்டுள்ளார். பின் தொடர்ந்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரும் தண்ணீர் குதித்து வெற்றிவேலை பிடித்தனர். பேரூராட்சி ஊழியர்கள் உதவியுடன் குளத்தில் தேடியும் லஞ்சப் பணம் கிடைக்கவில்லை. இதையடுத்து வெற்றிவேல் லஞ்சம் வாங்கிய போது சாலை ஓரத்தில் இருந்த தனியார் வங்கி சிசிடிவி கேமரா காட்சிகள் , சட்டை பையில் இருந்த ரசாயனத்தை ஆதாரமாக வைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு, லஞ்சம் வாங்குதல், தடயங்களை அழித்தல் உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.