பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ், 14.2 கிலோ தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்டு, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அவர் எழுதிய கடிதம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 6, 2025 தேதியிட்ட அந்தக் கடிதத்தில், தன்னை பொய்யாக குற்றம் சாட்டியுள்ளதாகவும், அதிகாரிகள் அறிக்கையில் கையெழுத்திட மறுத்ததற்காக உடல் ரீதியாக தாக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தன்னை 10-15 முறை தாக்கி, முகத்தில் பலமுறை அறைந்ததாகவும், உணவு மறுக்கப்பட்டு மிரட்டப்பட்டதாகவும் ரன்யா ராவ் குற்றம் சாட்டியுள்ளார்.
ரன்யா ராவ் தனது கடிதத்தில், சாப்பாடு கூட சரிவர போடாமல் தனக்கு மிகுந்த அழுத்தம், மன அழுத்தம், உடல் ரீதியான தாக்குதல் ஆகியவற்றை சந்திக்க நேர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், 50-60 பக்க ஆவணங்களிலும், 40 பக்க வெற்று காகிதங்களிலும் அதிகாரிகள் கட்டாயமாக கையெழுத்திட செய்ததாகக் கூறியுள்ளார். விசாரணையின் போது, “நீங்கள் கையெழுத்திடவில்லை என்றால், உங்கள் தந்தையை இந்த வழக்கில் சிக்கவைத்து, அவரையும் குற்றவாளியாக அறிவிப்போம்” என மிரட்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, அவர் பெரும் பயத்தில் அதிகாரிகளின் சொல்வதை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகக் கூறியுள்ளார்.
டிஆர்ஐ அதிகாரிகள் அளித்த தகவலின் படி, விமான நிலைய முனையத்திலிருந்து அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. ஆனால், ரன்யா ராவ் தனது கடிதத்தில், தன்னை விமானத்திற்குள்ளிருந்து நேரடியாக கைது செய்ததாகவும், அதன்பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் வரை தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். தன்னை தாக்கிய அதிகாரிகளை அடையாளம் காண முடியும் என்றும், தன்னை கடுமையாக வற்புறுத்தி கையெழுத்து வாங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் தற்போது கர்நாடக அரசியலிலும், திரையுலகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.