ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) விண்வெளிக்குச் செல்லும் மனிதர்களின் உடல் மாற்றங்களை ஆராயும் நோக்கில் “Vivaldi III” என்ற ஆய்வை முன்னெடுத்துள்ளது. இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, தன்னார்வலர்கள் 10 நாட்களுக்கு நீர்மடிப்பு படுக்கையில் படுத்திருக்க வேண்டும், இதற்காக அவர்களுக்கு ரூ.4.72 லட்சம் (5,000 யூரோ) சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த முயற்சி, விண்வெளியில் நீண்ட காலம் இருப்பதன் காரணமாக உடலில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ந்து, ஆரோக்கியமான பயணத்தை உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த ஆய்வில் பங்கேற்கும் 10 நபர்கள், நீர் நிரப்பப்பட்ட குளியல் தொட்டிகள் போன்ற ஒரு கண்டெயினரில், நீரில் முழுக்க மூழ்காமல், ஒரு நீர்ப்புகா துணியால் மூடப்பட்ட நிலையில் படுத்திருக்க வேண்டும். இந்த முறை, அவர்களை நிலையான நீர்த்தொட்டிக்குள் தொங்கும் நிலையில் வைத்திருப்பதால், விண்வெளியில் உள்ள நிலைமையை ஒத்துபோவதாக இருக்கிறது. இதில் பங்கேற்கும் நபர்கள் தாமதமில்லாமல் உணவுகள் பெறுவார்கள், கழிவறைக்கு செல்லும் நேரத்தில் சிறப்பு தயாரிக்கப்பட்ட ட்ராலியில் அழைத்துச் செல்லப்படுவார்கள், மேலும், அவர்களின் கைபேசிகள் மூலம் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
10 நாட்கள் முடிந்த பிறகு, பங்கேற்பவர்கள் 5 நாட்கள் ஆய்வுக்குட்படுத்தப்படுவார்கள், இதன் மூலம் அவர்கள் உடலில் ஏற்பட்ட மாற்றங்களைச் சரிசெய்ய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மேலும், 10 நாட்கள் கழித்து அவர்கள் மீண்டும் ஆய்வுக்கு வரவேண்டும். ESA நிறுவனத்தின் மனித ஆராய்ச்சி குழு தலைவர் Ann-Kathrin Vlacil, இந்த ஆய்வு மூலம் மிகச்சிறந்த முறையில் விண்வெளியில் மனித உடல் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அதற்கான தீர்வுகளை வடிவமைக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.