என் மீதான விமர்சனங்களை வரவேற்கிறேன் - பிரதமர் மோடி..!
Newstm Tamil March 17, 2025 03:48 AM

அமெரிக்க கம்ப்யூட்டர் விஞ்ஞானியும், எழுத்தாளருமான லெக்ஸ் பிரிட்மேன், பிரபலங்களை பேட்டி எடுத்து பாட்காஸ்ட் செய்வது வழக்கம்.அந்த வகையில், பிரதமர் மோடியை பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த பேட்டியை தன் சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.பல்வேறு விஷயங்கள் பற்றி இதில் மோடி பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

என் பலம் என்பது என் பெயரில் இல்லை. 140 கோடி இந்தியர்களின் ஆதரவும், பல்லாயிரம் ஆண்டு கால இந்திய கலாசாரமும் தான் என்னுடைய பலம்.

நான் எங்கு சென்றாலும், நான் பல்லாயிரம் ஆண்டு கால வேத பாரம்பரியத்தையும், ஸ்வாமி விவேகானந்தரின் அறிவுரைகளையும், 140 கோடி இந்தியர்களின் ஆசி, கனவுகள், எதிர்பார்ப்புகளையும் சுமந்து கொண்டே செல்கிறேன்.

உலகத்தலைவர்களுடன் நான் கை குலுக்கும்போது, அவர்களுடன் உண்மையில் கை குலுக்குவது மோடி அல்ல; அது 140 கோடி இந்தியர்கள் என்பதை கூற விரும்புகிறேன். இது என்னுடைய பலம் அல்ல; இது, இந்தியாவின் பலம்.

எப்போதெல்லாம் நாம் அமைதியைப் பற்றி பேசுகிறோமோ, அப்போது உலகம் கவனித்துக் கேட்கிறது.

ஏனெனில் இந்தியா என்பது கவுதம புத்தரின் பூமி; மகாத்மா காந்தியின் மண். இந்தியர்கள் ஒருபோதும் சண்டை சச்சரவுகளை விரும்புவதில்லை. நாங்கள் எப்போதும் நல்லிணக்கத்தையே விரும்புகிறோம்; ஆதரிக்கிறோம்.

நாங்கள் இயற்கைக்கு எதிரான போரையும் நாங்கள் விரும்புவதில்லை; நாடுகளுக்குள் சண்டையை வளர்க்கவும் விரும்புவதில்லை. நாங்கள் அமைதியை விரும்புகிறோம்.

எங்கெல்லாம் நாங்கள் சமாதானம் பேச முடியுமோ, அங்கெல்லாம் நாங்கள் அந்த பொறுப்பை பெருமிதத்துடன் செய்கிறோம்.

எனது சிறு வயது மிகவும் வறுமையில் கழிந்தது. ஆனால், வறுமையின் கொடுமையை உணர்ந்தது இல்லை. நல்ல ஷூ அணிந்து பழகிய ஒருவர், அவை இல்லாத பட்சத்தில் அதன் அருமையை உணர்வார். ஆனால் எங்களை பொறுத்தவரை, நாங்கள் எங்கள் வாழ்க்கையில் ஷூ அணிந்ததே இல்லை. எனவே, ஷூ அணியாமல் இருப்பது எங்களுக்கு ஒரு சிரமமே இல்லை. நாங்கள் ஒப்பிட்டு பார்க்கக்கூடிய ஒரு நிலைமையில் இருந்ததே இல்லை. அப்படி ஒரு வாழ்க்கையை தான் வாழ்ந்தோம்.

நான் இந்தியாவின் பிரதமர் ஆனபோது, பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமரை அழைத்தேன். ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கலாம் என்று அழைத்தேன். அமைதியை ஏற்படுத்துவதற்கான எனது ஒவ்வொரு நல்ல முயற்சியும், விரோதம் மற்றும் துரோகத்துடன் தான் எதிர்கொள்ளப்பட்டது. அவர்கள் அமைதி வழிக்கு வருவார்கள் என்று நாங்கள் உண்மையாகவே நம்பினோம். பாகிஸ்தான் மக்கள் கூட, அமைதிக்காக ஏங்குவதாக நான் நம்புகிறேன்.

என்னை குறை சொல்வதையும், அதை நான் எதிர்கொள்வது பற்றியும், ஒரு வாக்கியத்தில் குறிப்பிட வேண்டும் என்றால், நான் விமர்சனங்களை வரவேற்கிறேன் என்று கூறுவேன்.

எனக்கு ஒரு பலமான நம்பிக்கை உள்ளது. விமர்சனம் தான் ஜனநாயகத்தின் ஆன்மா. நான் இளைஞர்களுக்கு ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகிறேன்.

இரவு என்பது எவ்வளவு இருட்டாக இருந்தாலும் சரி, இது இன்னும் இரவு தான் என்று கருதுங்கள்; விடியல் வந்தே தீரும்இவ்வாறு மோடி கூறினார்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.