பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவியல் மொழி தான் எங்களது மூன்றாவது மொழி. தமிழகத்தின் கல்வி முறை தான் இந்திய கல்வி முறைக்கு தாயாக உள்ளது என குறிப்பிட்டு இருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது,
6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு, தகவல் மற்றும் தகவல்தொடர்பு தொழில்நுட்பம் (ICT) பாடத்தினைக் கற்றுக் கொடுக்க, மத்திய அரசு வழங்கிய நிதியை ஏப்பம் விட்டுவிட்டு, வாட்சப்பில் வருவதை எல்லாம் பேச வெட்கமாக இல்லையா உதயநிதி ரசிகர் மன்றத் தலைவரே?
அண்டை மாநிலமான கேரளாவில், ICT பாடத்திட்டம் தமிழ் உட்பட மும்மொழிகளில் கற்பிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் வெறும் வாய்ப் பேச்சு மட்டும் தான், செயலில் ஒன்றும் இல்லை. உங்க மகன் மட்டும் மும்மொழிகள் கற்கலாம், ஆனால் ஏழை எளியோரின் பிள்ளைகள், மும்மொழிகள் கற்கக் கூடாது என்று தடுக்கிறீர்களே? என்ன நியாயம் இது? என கேள்வி எழுப்பியுள்ளார்.