தொழுகையின் போது மயங்கி சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அடப்பன்வயலில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று பிற்பகல் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகைக்கு புதுத்தெரு பகுதியைச் சேர்ந்த சையது இப்ராஹீம் ஷா என்பவர் தொழுகையில் பங்கேற்க சென்றுள்ளார். ரமலான் மாதத்தை முன்னிட்டு நோன்பு கடைபிடித்து வரும் சையது இப்ராஹீம் ஷா, பள்ளிவாசலில் அனைவரின் மத்தியிலும் அமர்ந்து நிலையில் தொழுகையில் ஈடுபட்டுள்ளார். அப்போது சையது இப்ராஹீம்ஷா திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே சையது இப்ராஹீம் ஷா உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து சையது இப்ராஹீம் ஷா உடல் அவர் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று இஸ்லாமிய முறைப்படி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. புதுக்கோட்டையில் ரமலான் நோன்பு காலத்தில் தொழுகையின் போது மயங்கி விழுந்து ஒருவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.