ஏப்ரல் 1ம் தேதி முதல் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்குள் வாகனங்கள் நுழைய புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகைக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைக்கும் வரும் சுற்றுலா பயணிகள், ரயில், அரசுப் பேருந்துகளில் வரும் நிலையில், அவர்களுக்கு இ பாஸ் நடைமுறை தேவையில்லை என்றும் சொந்த மற்றும் வாடகை வாகனங்களின் மூலமாக வருபவர்கள் முன்கூட்டியே இ பாஸ் பெற வேண்டும் என்றும் தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனால் குறிப்பிட்ட அளவில் மட்டுமே இ பாஸ் வழங்கப்படும் என்பதால், இந்த ஆண்டு கோடை சீசனுக்கு நினைத்த நேரத்தில் மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் சமர்ப்பித்த தகவலில், உதகைக்கு சீசன் காலங்களில் தினமும் கார், வேன் உள்பட 20,011 வாகனங்களும், பிற நாட்களில் தினமும் 2,002 வாகனங்களும், கொடைக்கானலுக்கு சீசன் மாதங்களில் 5,135 வாகனங்களும், சீசன் இல்லாதபோது 2,100 வாகனங்களும் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மலை வாசஸ்தலங்களில் உள்ள தங்குமிடங்கள், அறைகள், வாகன நிறுத்தங்கள் குறித்த விவரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்நிலையில் உதகைக்கு தற்போது வார நாட்களில் தினமும் 3,000 சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களில் தினமும் 5,000லிருந்து 7,000 வாகனங்களும் வருகின்றன. அதே போன்று கொடைக்கானலுக்கு வார நாட்களில் தினமும் 3,000லிருந்து 4,000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் தினமும் 5,000 வாகனங்கள் வரை வருவதாகக் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரும் ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து ஜூன் 30ம் தேதி வரை கட்டாயமாக இதை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கூறியுள்ள நீதிபதிகள், உள்ளூர் பதிவெண் கொண்ட வாகனங்களுக்கும், விவசாயப் பயன்பாடு வாகனங்களுக்கும் தனி பாஸ் அளிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளனர். ரயில்கள் மற்றும் அரசுப் பேருந்துகளில் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ பாஸ் நடைமுறை தேவையில்லை என்றும் கூறியுள்ளனர்.
இவற்றைத் தவிர்த்து, மாவட்ட ஆட்சியர்களுக்கு, “மின்சார வாகனங்களுக்கு இ பாஸ் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கொடைக்கானல் மலைக்கு 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள வாகனங்களை இயக்குவதற்கு, கடந்த டிசம்பரில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தடை விதித்தது போல, நீலகிரி ஆட்சியரும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கோடை சீசனின்போது இரு நகரங்களிலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கூடுதலாக போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும். வாகன கட்டுப்பாடு குறித்த உத்தரவை செயல்படுத்தியது தொடர்பாக, இரு மாவட்ட ஆட்சியர்களும் வரும் ஏப்ரல் 25 அன்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். உதகை, கொடைக்கானலில் மின்சார வாகனங்களை இயக்க உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு இயலாதபட்சத்தில், பழங்குடியின மக்கள், கூட்டுறவு சங்கங்கள் அல்லது தனியார் மூலமாக இயக்க அரசு நடவடிக்கை எடுக்கலாம்.
மலைப்பகுதிக்குக் கீழே சுற்றுலா வாகனங்களை நிறுத்திவிட்டு, மின்சார வாகனங்களில் சுற்றுலாப் பயணிகளை சுற்றுலா மையங்களுக்கு அழைத்துச் சென்று மீண்டும் அதே இடங்களில் அவர்களை இறக்கிவிடலாம். இதனால் மலைப்பகுதியின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வாய்ப்புள்ளது” என்று நீதிபதிகள் உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.