தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலில் திரண்டனர். இந்த நிலையில் காரைக்குடியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரியான ஓம் குமார் என்பவர் தனது குடும்பத்துடன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்தார்.
அவர் 100 ரூபாய் கட்டண வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய காத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் ஓம் குமார் மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஓம் குமார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ஏற்கனவே அவருக்கு இழுப்பு நோய் இருந்துள்ளது. சாமி கும்பிட வந்த இடத்தில் வியாபாரி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.