ரூ.75 கோடி மதிப்புள்ள 37 கிலோ போதை பொருள் கடத்தல்; மங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ள 02 நைஜீரிய பெண்கள்..!
Seithipunal Tamil March 17, 2025 07:48 AM

இந்தியாவில் சமீப காலமாக போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக, பெங்களூரு மற்றும் மும்பை போன்ற பெருநகரங்களில் அதிகரித்து வருவது பெரும் சவாலாக உள்ளது.

இந்நிலையில், பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.75 கோடி மதிப்புள்ள 37 கிலோ போதை கடத்தல் தொடர்பாக நைஜீரிய பெண்கள் இருவரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து போதை பொருள்களை கடத்திவரும் இத்தகைய போதை வலையமைப்புகளை தடுக்க, உளவுத்துறை மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ,சந்தேக நபர்களை கண்காணித்து கைது செய்யும் நடவடிக்கைகளை போலீஸ் அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறான தெரிவிறகண்காணிப்பில் தான் இன்று பெங்களூரு விமான நிலையத்தில் நைஜீரிய பெண்கள் கைதாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கைது நடவடிக்கை குறித்து மங்களூரு போலீஸ் அதிகாரி அனுபம் அகர்வால் கூறியதாவது:

கைதானவர்கள் பம்பா பான்டா 31, மற்றும் அபிகெய்ல் அடோனிஸ் 30 என்றும் இருவரும் டில்லியிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு பெங்களூருக்கு வந்த நிலையில் பிடிபட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அவர்கள் தள்ளுவண்டிகளில் பைகளை இழுத்து வந்தனர். அவர்கள் மீது சந்தேகத்தின் பேரில் நடத்திய சோதனையில் 37 கிலோ போதைப் பொருளுடன், 4 மொபைல் போன்கள், பாஸ்போர்ட்கள் மற்றும் ரூ.18,000 இருந்தது. அவற்றை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறித்த நைஜீரிய பெண்கள் இருவரும் டில்லியில் வசிக்கிறார்கள். இங்கிருந்து நாடு முழுவதும் போதை மருந்து கடத்தல் வேலைகளை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், இவர்கள் விமானங்கள் மூலம் போதைப்பொருட்களை மும்பைக்கு 37 முறையும் 22 முறை பெங்களூருக்கும் கொண்டு சென்று வந்துள்ளது தெரிய வந்துள்ளது என போலீஸ் அதிகாரி அனுபம் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இவர்களில் பான்டா 2020-லும் அடோனிஸ் 2016 முதலும் தொழில்முறை விசாவில் இந்தியாவில் தங்கியுள்ளதாகவும், இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக போதைப்பொருட்கள் கடத்தி வருவது தெரிய வந்துள்ளது எனவும், இருவரிடம் மேலும் விசாரணை நடைபெறுவதாக மங்களூரு போலீஸ் அதிகாரி அனுபம் அகர்வால் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.