தமிழகத்தில் திமுக அரசு தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாத அரசாக செயலற்ற அரசாக நடைபெற்று வருகிறது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் ஜி.கே.வாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் அங்கு பேசுகையில்; '' 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தமாகா வெற்றி பெறவேண்டும் என்ற உறுதியோடு வியூகத்தின் அடிப்படையிலான பணிகளை தொடங்கியுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வரும் ஏப்ரல் மாதம் முதல் மண்டல ரீதியாக மக்கள் விரோத திமுக ஆட்சியை கண்டித்து, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும், தமிழகத்தில் திமுக அரசு தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாத அரசாக, செயலற்ற அரசாக நடைபெற்று வருகிறதாகவும் விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய ஜி.கே. வாசன், கடந்த சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று குறிப்பிட்டதோது, 2026 சட்டசபை தேர்தலை கணக்கில் வைத்துக்கொண்டு, புதிது புதிதாக தேவையற்ற பிரச்சினைகளை எழுப்பி மத்திய அரசோடு தமிழக அரசு மோதல் போக்கை கடைபிடிக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஆளும் திமுக மீது மக்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர் என்றும், திமுகவுக்கு எதிரான எதிர்மறை வாக்குகள் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பதுதான் உண்மை நிலை என்று வாசன் கூறியுள்ளார். மேலும், புதிய தேசிய கல்விக்கொள்கை பல்வேறு அறிஞர்களின் ஆலோசனைப்படி மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதை திமுக அரசு ஏற்க மறுக்கிறது என செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து அவர் பேசுகையில், தாய் மொழியை படித்துக் கொண்டு, தொடர்பு மொழி ஆங்கிலம் இருந்தபோதும், மூன்றாவதாக ஒரு மொழியை அவரவர் விருப்பப்படி கற்றுக் கொள்ளலாம் என்று தான் தேசியக் கல்விக் கொள்கை கூறுகிறது. ஆனால், இதை தமிழக அரசு எதிர்த்து வருகிறது. இதனால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்று தமாகா தலைவர் ஜி.கே .வாசன் குறிப்பிட்டுள்ளார்.