எகிறும் எதிர்பார்ப்பு... என்ன செய்யப் போகிறார் எடப்பாடி?! இன்று பட்ஜெட் மீதான விவாதம் தொடக்கம்!
Dinamaalai March 17, 2025 11:48 AM

இன்று முதல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடத்தப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் எதிர்கட்சிகள் தேர்தலுக்கான அரசியலில் முனைப்புடன் உள்ளன. இன்று சட்டப்பேரவையில் எடப்பாடி என்ன செய்யப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே எழுந்துள்ளது.  இன்று சட்டப்பேரவை தலைவர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசின் 2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை கடந்த மார்ச் 14ம் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து, 2025-26ம் நிதியாண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் உழவர் நலன் மற்றும் வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மார்ச் 15ம் தேதி தாக்கல் செய்துள்ளார்.   இந்நிலையில் இன்று முதல் மார்ச் 20ம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது. 21ம் தேதி துறை சார்ந்த இரு அமைச்சர்களின் விவாத்திற்கு பதில் அளிப்பார்கள். இதன்படி காலை 9:30 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். மேலுல், மறைந்த பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் கே.எம். செரியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும்.
 
இதனைத் தொடர்ந்து, வினாக்கள் விடைகள் நேரத்தில்,  சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். கேள்வி நேரம் முடிந்த பிறகு நேரமில்லா நேரத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் மீது அதிமுக அளித்த நம்பிக்கை இல்லா தீர்மானம்  விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை உட்பட  பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.  இதன் காரணமாக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.