80களின் காலகட்டத்தில் அதிகமான திரைப்படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து வந்த பிரபல நடிகை பிந்து கோஷ், மகன் கைவிடப்பட்ட நிலையில், ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருந்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. அதன் பின்னர் அவரது பேட்டியும் ஒளிப்பரப்பானது. அதில், தனக்கு உடலில் பல பிரச்சினைகள் இருப்பதாகவும், உதவுவதற்கு யாரும் இல்லாமல் தான் தனியாக கஷ்டப்படுவதாகவும் கண்கலங்க பேசி இருந்தார்.
ஒருசில நடிகர்களிடம் ஃபோன் செய்து அவர் உதவி கேட்ட போதிலும் அவர்கள் யாரும் தனக்கு உதவ முன்வரவில்லை என்று பேசியிருந்தார். அந்த பேட்டியில், “நான் நிறைய பேரை சிரிக்க வச்சிருக்கேன். நிறைய சினிமா நடிகர்களோடு டான்ஸ் ஆடி இருக்கிறேன்.அவங்க எல்லோரும் சூட்டிங் ஸ்பாட்டில் நான் இருந்தால் சிரிச்சிட்டே இருப்பாங்க. நான் கிட்டத்தட்ட 70 வருஷமா சினிமாவில் இருந்திருக்கிறேன். எனக்கு இப்போ 76 வயசாகுது. எனக்கு ஆரம்பத்தில் சின்ன சின்னதாக பிரச்சனை வர தொடங்கியது. இப்போ உடம்பு முழுக்க பிரச்சனை வந்துவிட்டது. முதலில் நான் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணினது தான் தப்பு என்று நினைக்கிறேன். வயிறு பெரியதாக இருக்கிறது என்று அதற்காக சர்ஜரி செய்தேன். அப்போ 13 கிலோ சதையை எடுத்தேன்.
அதற்கு பிறகு கர்ப்பப்பை பிரச்சனை வந்ததால் அதற்காகவும் ஒரு ஆபரேஷன் செய்தேன். அந்த நேரத்தில் எனக்கு சென்னையில் வீடு இருந்தது தூங்காதே தம்பி தூங்காதே பட சூட்டிங் நடைபெற்றது. அப்போது தான் எனக்கு ஆபரேஷன் நடந்தது. ஆபரேஷனுக்காக ரெண்டு லட்சம், மூணு லட்சம் பணம் செலவானதும் சென்னையில் இருந்த வீட்டை விற்று தான் பணத்தை கொடுத்தேன். எனக்கு இரண்டு பசங்க இருக்காங்க. பெரிய பையன் நான் வேண்டாம் என்று ஹைதராபாத்துக்கு போயிட்டான்.
சின்ன பையன் தான் அவனுடைய வருமானத்தில் என்னை பார்த்துக் கொண்டு வருகிறான். நான் ஆரம்பத்தில் இருந்த வீடு ஒன்றரை கிரவுண்டில் இருந்தது. இப்போ வீட்டில் எந்த பொருள் ரிப்பேர் ஆனாலும் வந்து பார்க்க ஆளில்லை. நடிகர் சங்கத்தில் இருந்து உதவி கிடைத்ததா என்று எல்லோரும் கேட்கிறார்கள் எனக்கு இப்போது அறக்கட்டளை ஒன்றிலிருந்து தான் உதவி வந்து கொண்டிருக்கிறது வேறு எதுவும் வரவில்லை” என்று பேசியிருந்தார்.
அதன் பின்னர் நடிகர் பாலா மருத்துவமனை சென்று பிந்துகோஷுக்கு உதவி செய்த வீடியோ வைரலானது. இந்நிலையில், உடல்நிலை சரியில்லாமல் நடிகை பிந்துகோஷ் நேற்று காலமானார். இன்று சென்னையில் இறுதிசடங்குகள் நடைபெற உள்ளது.