இலங்கையில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம்... இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்!
Dinamaalai March 17, 2025 12:48 PM

இந்தியா உதவியுடன் இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள புதிய சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்துக்கு ஏப்ரல் முதல் வாரம் இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிவைக்கிறார்.  மேலும், இரு நாடுகளிடையே பல புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட உள்ளன.

இலங்கையில் அதிகரித்து வரும் மின் தேவைகளை சமாளிக்கும் வகையில் திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் புதிய அனல் மின்நிலையம் அமைக்க இந்திய-இலங்கை அரசுகளிடையே கடந்த 2011ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், சம்பூரில் அமைய உள்ள புதிய அனல் மின் நிலையத்தால் சுற்றுச் சூழல் பாதிப்புகள் ஏற்படும் என்று திருகோணமலை மாவட்ட மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, தொடர் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, சம்பூரில் சூரிய மின் உற்பத்தியை மேற்கொள்ளும் வகையில் திட்டத்தை மாற்றியமைக்க இந்திய-இலங்கை அரசுகள் ஒப்புக்கொண்டன.

2022 டிசம்பரில் கொழும்புவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவின் தேசிய அனல் மின் கழகம் (என்டிபிசி) மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவை சம்பூரில் 100 மெகாவாட் சூரிய மின்சக்தி ஆலையை நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டன. ஆனால், இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஏப்ரல் மாத தொடக்கத்தில் இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பூரில் அமைய உள்ள புதிய சூரிய மின் உற்பத்தி நிலையத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், இலங்கை-இந்தியா நாடுகளுக்கிடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட உள்ளன.

இலங்கையில் பல சிவன் கோயில்கள் இருந்தாலும், திருக்கோணேச்சரம், நகுலேசுவரம், திருக்கே தீச்சரம், முன்னேசுவரம், தொண்டீசுவரம் ஆகிய சிவன் கோயில்கள் பஞ்ச ஈஸ்வரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் திருக்கோணேச்சரம் சிவன் ஆலயம் திருகோணமலையில் அமைந்துள்ளது.

இலங்கைக்கு வருகை தரவுள்ள பிரதமர் நரேந்திர மோடி திருக்கோணேச்சர ஆலயத்தில் தரிசனம் செய்ய வேண்டும் எனவும், இந்த ஆலயத்தின் திருப்பணிகளுக்கு இந்திய அரசு உதவ வேண்டும் எனவும் இலங்கையில் உள்ள இந்து மாமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.