“போர் தொடங்கி விட்டது”… இனி அத்தனை ஊழல்களையும் தெரியப்படுத்தும் வரை பாஜக ஓயாது… தமிழிசை ஆவேசம்…!!
SeithiSolai Tamil March 18, 2025 02:48 AM

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மது உற்பத்தி செய்யும் ஆலை சார்ந்த அலுவலங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில் ரூ.1000 கோடி முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இந்த முறைகேடுக்கு திமுக அரசு துணைபோகி உள்ளதாக பாஜக குற்றம் சாட்டியது. அதோடு எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தது. இந்த விவகாரத்தில் காவல்துறை போராட்டத்திற்கு அனுமதி மறுத்தது. இன்று பாஜகவினர் போராட்டத்தில் கலந்து கொள்வதை தடுக்கும் வகையில், காலை முதலே பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

இதில் தமிழக பாஜக முன்னாள் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, அதிகாலை முதலே காவல்துறையினர் எனது வீட்டை சுற்றி நின்றிருக்கிறார்கள். எந்தவித போலீஸ் அடக்குமுறை இருந்தாலும், திமுக அரசின் டாஸ்மாக் ஊழலை வெளிக்கொண்டுவர பாஜக சுணங்காது. இந்த ஆயிரம் கோடி ஆரம்பம் தான். பல லட்சம் கோடிகள் இதில் சுருட்டப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே இந்த அமைச்சர் அதற்காக பெயர் பெற்றவர். இன்று போர் ஆரம்பித்துவிட்டது. தமிழகத்தில் உள்ள அத்தனை ஊழல்களையும் வெளிக்கொண்டு வருவோம். பாஜகவினர் ஓயாமல் பாடுபடுவோம் என்று தெரிவித்தார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டாஸ்மாக் விவகாரத்தில் 1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக தெரிவித்த அதே தொகையை அமலாக்க துறையும் சொல்வது எப்படி என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்த தமிழிசை சௌந்தரராஜன், அமலாக்கத்துறை தெரிவித்த கணக்கினை அண்ணாமலை சுட்டிக்காட்டி உள்ளார். ஒருவேளை ஆயிரம் கோடிக்கும் அதிகமாக ஊழல் நடந்த தொகையை சொல்லவில்லை என்பதால் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டு இருக்கலாம் என்றும் தெரிவித்தார். ஊழல் முறைகேடு செய்வதில் கைதேர்ந்தவரான செந்தில் பாலாஜி கமிஷன் அடித்து முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.