அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியில் கூறியதாவது, 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்த போது 1.14 லட்சம் கோடி கடன். மக்களை ஏமாற்றும் தந்திரம் கொண்டவர்களில் திமுகவை மிஞ்ச முடியாது. நாட்டு மக்களுக்கு எதுவும் தெரியாது என திமுக நினைத்துக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வரும் முன்பு 5.18 லட்சம் கோடி கடன் இருந்தது .திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளில் நான்கரை லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். 2021-ஆம் ஆண்டு வரை கடன் சுமை 5 லட்சத்து 18 ஆயிரம் கோடியாக தான் இருந்தது. இவ்வளவு கோடி கடன் வாங்கி எந்த புதிய திட்டமும் செயல்படுத்தவில்லை. வரி மேல் வரி விதிக்கிறார்கள். விலைவாசியும் உயர்ந்து கொண்டே போகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 35 சதவீதம் அளவுக்கு மதுபான விற்பனை அதிகரித்துள்ளது.
வருமானமும் அதிகரித்து கடனும் அதிகரிப்பது தான் நிர்வாகத் திறனா? எவ்வளவு மூலதன செலவு? எவ்வளவு வருவாய்? எவ்வளவு கடன் என சொல்வார்களா? திமுக ஆட்சியில் 40 ஆயிரம் கோடி அளவுக்கு டாஸ்மாக்கில் முறைகேடு நடந்துள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அது உறுதியான பிறகு அதிகாரப்பூர்வமாக சொல்லுவோம். முழு தகவல் கிடைத்ததும் டாஸ்மாக் ஊழல் குறித்து தெரியப்படுத்தப்படும். அதிமுகவினரின் இடங்களில் ரெய்டு நடத்திய போது கொக்கரித்தார்களே? நீதிமன்றத்திற்கு சென்ற தவறு இல்லை என நிரூபிக்க வேண்டும். இப்போது அமலாக்கத்துறை பொய் வழக்கு போட்டு ரெய்டு நடத்துவதாக பிதற்றி கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு வந்தால் ரத்தம். எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? என கேள்வி எழுப்பியுள்ளார்.