மதுரை மாவட்டம் கட்சைகட்டி பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவர் நகைகளில் கற்கள் பதிக்கும் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 21-ஆம் தேதி முனியசாமி 7 கிராம் அலெக்ஸாண்டர் ரத்தின கல்லை அதன் ரசீதுடன் சேர்த்து விற்பனை செய்வதற்காக ராமநாதபுரத்திற்கு சென்றார். அப்போது ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகே இருக்கும் ரயில்வே கேட் பகுதியில் 7 மர்ம நபர்கள் முனியசாமியை சுற்றி வளைத்துள்ளனர். அதன் பிறகு 60 லட்சம் மதிப்புள்ள அந்த ரத்தின கல், அதன் ரசீது முனியசாமியின் செல்போன் 15 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து முனியசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வந்தனர். இதனையடுத்து வழிப்பறியில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த முத்து செல்வம், தேனியை சேர்ந்த அபுதாஹிர், சிவகங்கை சேர்ந்த முகமது, அசாருதீன் முகமது, கனகராஜ், ராஜா ஜோஸ் குமார், கே கனகராஜ் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த ரத்தினக்கல் 15 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மீட்டனர்.