தமிழ் சினிமாவில் பல வருடங்களாக மக்கள் தொடர்பாளராகப் பணி புரிந்து வந்தவர் ராதா கண்ணன். நடிகர் நடிகைகள் பலருக்கு தனிப்பட்ட முறையிலும் மேனேஜராக இருந்து வந்த இவர் தயாரிப்பாளர் சங்கத்துக்கும்கூட செய்தித் தொடர்பாளராக இருந்திருக்கிறாராம்.
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் வசித்து வந்த இவர் சமீப சில ஆண்டுகளாக சிறுநீரகப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட தாம்பரம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அட்மிட் ஆனார். மருத்துவமனையில் உள் நோயாளியாகச் சேர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இவரது உடல் நலம் மற்றும் சிகிச்சை குறித்து நடிகர் ரஜினிகாந்த் போனில் அழைத்து விசாரித்திருக்கிறார்.
இதுகுறித்து ராதா கண்ணனைத் தொடர்பு கொண்டு பேசினோம்.
''சிறுநீரகப் பிரச்னை ரொம்ப வருஷமாகவே இருந்திட்டிருக்கு. இப்ப ஆஸ்பிடல்ல அட்மிட் ஆனதுல இருந்து சில பல லட்சங்கள் செலவாகிடுச்சு. மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பது தெரிஞ்ச என் நண்பர்கள் சிலர் ரஜினி சார் கவனத்துக்குத் தகவலைக் கொண்டு போயிருக்காங்க.
மறைந்த ஜி.வி.சார்கிட்ட ரொம்ப வருஷமா நான் வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். அந்தத் தொடர்புல 'தளபதி' பட நாட்கள்ல அடிக்கடி ரஜினி சாரையும் சந்தித்துப் பேசியிருக்கேன். தவிர பல நடிகர்களுக்கு மேனேஜரா இருந்ததால் ரஜினி சாருக்கு என்னை ஓரளவுக்குத் தெரியும். 'உழைப்பாளி' பட ஷூட்டிங் சமயத்துலயும் அவர்கூட ரொம்பப் பழகியிருக்கேன்.
என் நண்பர்கள் மூலமா விஷயத்தைக் கேள்விப்பட்டதுமே, தன் உதவியாளரைக் கூப்பிட்டு 'அவர்கிட்ட பேசணும்'னு சொல்லியிருக்கார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை காலையிலயே ரஜினி சார் வீட்டுல இருந்து சுப்பையா கூப்பிட்டு, 'தலைவர் பேசறார்'னு சொல்லிக் கனெக்ட் செய்தார்.
'என்ன ராதா கண்ணன், என்ன பிரச்னை'னு அவர் குரல்ல கேட்ட அந்த நிமிஷமே நாலு நாளா இருந்த சோர்வெல்லாம் செகண்டுல காணாமப் போன மாதிரி ஒரு ஃபீல். என்னால சரியாப் பேசக் கூட முடியலை. ஆனாலும் பேசினேன். தொடர்ந்து 'என்ன பண்ணனும் சொல்லுங்க கண்ணன்'னு கேட்டார்.
என்னால தொடர்ந்து பேச முடியாத சூழல்ல பக்கத்துல இருந்த என் மகன்கிட்ட போனைக் கொடுத்துட்டேன்.
பையன் வாங்கி என் பிரச்னை எடுத்துகிட்டிருந்த ட்ரீட்மென்ட் குறித்த விபரங்களைச் சொல்லியிருக்கான். உடனே 'தம்பி நீ நாளைக்கு காலையில பத்து மணிக்கு கல்யாண மண்டபம் வந்திடுன்'னு சொல்லியிருக்கார்.
மறுநாள் சொன்னது போலவே என் பையன் ராகவேந்திரா கல்யாண மண்டபத்துக்குப் போனான். நான் எதிர்பார்க்காத தொகையைக் கொடுத்து விட்டிருக்கார். அன்னைக்கு சாயங்காலமே நான் டிஸ் சார்ஜ் ஆகிட்டேன். இருந்தாலும் சில நாள் கழிச்சு திரும்பவும் ஃபாலோ அப்க்குப் போக வேண்டியிருக்கு.
அவர் இருக்கிற பிஸியில காதுக்கு வர்ற தகவல்களின் அடிப்படையில எப்பவோ பழகியிருந்தாலும் மறக்காம தொடர்பு கொண்டு நாலு வார்த்தை ஆறுதலா பேசினார்ங்கிறதை நினைச்சுப் பார்த்தாலே பாதி குணமாகிட்ட மாதிரி தோணுது.
அதனால இப்ப இருக்கிற உடல் பிரச்னைகள் இருந்து சீக்கிரமே மீண்டு வந்து அவரை நேரில் போய் சந்திச்சு என் நன்றியைத் தெரிவிக்கலாம்னு இருக்கேன்'' என நெகிழ்ச்சியுடன் முடித்தார் அவர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...